×

அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிரபல தாதா சகோதரர் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க முயற்சி

புதுடெல்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல், நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, அந்நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், அங்கிருந்தபடி, பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்டார்.

இதற்கிடையில் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் ஆகியோர் பொறுப்பேற்றனர். மேலும் சில வாரங்களுக்கு முன், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், மும்பையில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டதற்கும் பிஷ்னோய் சகோதரர்கள் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் வாயிலாக அமெரிக்காவுக்கு அன்மோல் பிஷ்னோய் தப்பி சென்றார். அங்கிருந்தபடியே நம் நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து மும்பை போலீசாரின் கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, ‘ரெட் கார்னர்’ எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீசை, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் வெளியிட்டது.

இதற்கிடையே, போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக, கலிபோர்னியாவில் அன்மோல் பிஷ்னோயை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மும்பை போலீசார் துவங்கியுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் அன்மோல் பிஷ்னோய் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவால் தேடப்படும் பிரபல தாதாவான கோல்டி பிரார், சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதேபோல் அன்மோல் பிஷ்னோய்க்கு ஜாமின் வழங்கப்படும் என்றும், அவரை நாடு கடத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

The post அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட பிரபல தாதா சகோதரர் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : USA ,New Delhi ,Anmol ,Dada Lawrence Bishnoi ,United States ,Punjab ,Sabarmati ,Gujarat ,Dada ,America ,
× RELATED கேம் சேஞ்சர் புரமோஷன் அமெரிக்காவில் ராம் சரண், ஷங்கர்