அண்ணாநகர்: பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க வசதியாக நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டரின் செல்போன் நம்பர், வீட்டின் சுவர், அலுவலக சுவர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை நொளம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட சுவர்களில் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தங்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக சுவரில் உள்ள இன்ஸ்பெக்டரின் செல்போன் நம்பரை நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவிகள், வேலைக்கு தனியாக செல்கின்ற பெண்கள் ஆகியோருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது.
நொளம்பூர் காவல்நிலைய போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; நொளம்பூர் பகுதியில் உள்ள அனைத்து சுவர்களிலும் இன்ஸ்பெக்டரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். பெண்கள் தனியாக நடந்து செல்லும்போது கேலி, கிண்டல் செய்வது, செல்போன், செயின் பறிப்பு பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக இன்ஸ்பெக்டரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். கல்லூரி, பள்ளி மாணவிகள் அச்சப்படாமல் செல்லலாம். இதனால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘’கல்லூரி, பள்ளி மாணவிகள், வேலைக்கு தனியாக நடந்துச்செல்லும் பெண்கள் பயமின்றி பாதுகாப்புடன் செல்வதற்கு வசதியாகத்தான் நொளம்பூர் பகுதியில் உள்ள சுவர்களில் இன்ஸ்பெக்டரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டுள்ளது. எனவே பெண்களுக்கு எந்த பிரச்னை நடந்தாலும் உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்போனுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம். உடனடியாக போலீசார் வந்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றனர்.
The post பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க இன்ஸ்பெக்டரின் செல்போன் நம்பர் வீடு, ஆபீஸ் சுவர்களில் அச்சடிப்பு: நொளம்பூர் போலீசாருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.