மும்பை: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்களித்தனர். வரும் 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக இன்று (நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் பொதுமக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை 6.30 மணி முதலே வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். வாக்குப் பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித் பவார், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கவுதமி கபூர், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைபோல ஜார்கண்ட் சட்டசபைக்கான 2ம் கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நக்சல் பாதிப்பு மற்றும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்டனர். இதுதவிர உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ‘மகாயுதி’ கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘மகாவிகாஸ் அகாடி’ கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதால் 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 6 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜார்கண்டில் ஏற்கனவே கடந்த 13ம் தேதி முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – இடதுசாரிகள் ஓரணியாகவும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிரணியாகவும் களம் காண்கின்றன.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. வருகிற 23ம் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்டில் எந்த கட்சியின் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற அடுத்த நாளான 24ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டமும், 25ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அரசியல் பரபரப்பு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
The post அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாக்களிப்பு; மகாராஷ்டிரா, ஜார்கண்டில் விறுவிறு வாக்குப்பதிவு: 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.