×

சிட்கோ தொழிற்பேட்டையில் ஊதிய உயர்வு கேட்டு தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்

திருப்போரூர்: ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருப்போரூர் அடுத்துள்ள ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் 45 தொழிலாளர்களும், 40க்கும் மேற்பட்ட அலுவலர்களும் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த 3 வருடங்களாக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இவ்விவகாரம் குறித்து தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்திலும் விசாரணை நடைபெற்று, தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பித்து இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று முதல் தொழிற்சாலை ஊழியர்களுக்கு ஷிப்ட் முறை அமல்படுத்தப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊழியர்கள் ஊதிய உயர்வு அளித்தால் ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் பழைய முறையில் வழக்கமான பகல் நேர ஷிப்டில்தான் வேலை செய்ய முடியும் என்று கூறியுள்ளனர். இதற்கு நிர்வாகத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து ஷிப்ட் முறையை வாபஸ் வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post சிட்கோ தொழிற்பேட்டையில் ஊதிய உயர்வு கேட்டு தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Citco ,Industrial Estate ,Tiruporur ,Aladhur CITCO Industrial Estate ,Citco industrial estate ,Alatur ,Citco Industrial ,Estate ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை பகுதியில் மின்விநியோகம் இன்று நிறுத்தம்