×

ஜிரிபாமில் 6 பேரை கடத்திக் கொன்ற மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை : பாஜ கூட்டணி எம்எல்ஏக்கள் கெடு

இம்பால்: கடந்த ஒன்றரை ஆண்டாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் சமீபத்தில் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் கடத்திக் கொலை செய்யப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்திக் கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்து, கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்துள்ளது. இம்பால் சமவெளிப் பகுதியில் நடந்த போராட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. ஜிரிபாமில் நடந்த போராட்டத்தில் ஒருவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, ஜிரிபாம் கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை முதல்வர் பிரேன் சிங் நேற்று முன்தினம் இரவு கூட்டினார். இதில், முதல்வர் பிரேன் சிங் உட்பட 27 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ‘ஜிரிபாமில் 6 அப்பாவி பெண்கள், குழந்தைகளை கொன்ற குக்கி தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த 7 நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே போல அவர்களை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும். கடந்த 14ம் தேதி உத்தரவுப்படி ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மீண்டும் அமல்படுத்தியது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மணிப்பூர் மக்களின் கருத்தை கேட்டறிந்து எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மருத்துவ காரணங்களுக்காக பங்கேற்க முடியவில்லை என 7 எம்எல்ஏக்களும், எந்த காரணமும் தெரிவிக்காமல் பங்கேற்கவில்லை என 11 பேரும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 3 பேரின் கையெழுத்து போலியானது என குற்றம்சாட்டி உள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாஜ கூட்டணியில் 46 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், 27 பேர் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றது கூட்டணியில் ஒற்றுமை இல்லாததை காட்டுவதாக விமர்சித்துள்ளார்.

 

The post ஜிரிபாமில் 6 பேரை கடத்திக் கொன்ற மணிப்பூர் தீவிரவாதிகள் மீது 7 நாளில் கடும் நடவடிக்கை : பாஜ கூட்டணி எம்எல்ஏக்கள் கெடு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Jiribam ,BJP alliance MLAs ,Imphal ,Ziribam ,Dinakaran ,
× RELATED உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை...