×
Saravana Stores

திருவொற்றியூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் நீதிபதிகள் ஆய்வு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதி அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக்கு இயங்கி வரும் இந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் மாதம்தோறும் வாடகை செலுத்துவதால் அரசுக்கு பண விரயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், திருவொற்றியூர் நீதிமன்றம், அரசு கலைக்கல்லூரி மற்றும் தாசில்தார் அலுவலகத்திற்கு அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாக கட்டிடம் கட்டித் தர வேண்டும், என்று தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கே.பி.சங்கர் எம்எல்ஏ கோரிக்கை வைத்தார்.

அதன்பேரில், திருவொற்றியூர் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலை பள்ளி அருகே உள்ள ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில் உயர் கல்வித்துறை சார்பில் ரூ.16 கோடி செலவில் அரசு கலைக் கல்லூரிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவெற்றியூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் இதே ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில், 1.7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யபட்டது.

இந்த இடத்தை கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில், சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாதாமஸ், நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணகுமார், திருவொற்றியூர் தாசில்தார் சகாயராணி மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அனைத்து வசதிகளுடன் கூடிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் நீதிமன்றம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து செய்யப்பட்ட ஆய்வின் அறிக்கையை அரசுக்கு அனுப்படும் என்றும், அரசின் அனுமதி பெற்று துறை ரீதியான ஆவண நகர்வுகள், நடைமுறைகள் முடிந்தவுடன் டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது அரசு வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், பொன்னிவளவன் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுப்பிரமணி, நிர்வாகிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post திருவொற்றியூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் நீதிபதிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur Integrated Court ,Thiruvotiyur ,Kalatippet ,Tiruvotiyur ,
× RELATED திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் 4...