×

பேட்டிங்கில் மிரட்டிய லுாயிஸ்: இமாலய இலக்கை ‘சேஸ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

செயின்ட் லுாசியா: கரீபியன் பகுதியில் உள்ள செயின்ட் லுாசியா தீவில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்து அணியுடனான, 4வது டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்க வீரர்கள் பில் சால்ட் 55 ரன், வில் ஜேக்ஸ் 25 ரன் எடுத்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் குவித்தது. ஜேகப் பெதேல் 62 ரன் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் குடகேஸ் மோட்டீ 2, ரோஸ்டன் சேஸ் 1, அல்சாரி ஜோசப் 1 விக்கெட் வீழ்த்தனர். பின், 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆட்டத்தை துவக்கினர்.

துவக்க வீரர்கள் எவின் லுாயிஸ் 31 பந்துகளில் 68 ரன் எடுத்து மிரட்டினார். சாய் ஹோப், 24 பந்துகளில் 54 ரன் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 6 பந்துகள் மீதம் இருக்கையில், வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் ரெஹான் அஹமது, 43 ரன் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்தினார். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை, ஏற்கனவே 3 போட்டிகளை வென்றுள்ள இங்கிலாந்து அணி கைப்பற்றி உள்ளது. இருப்பினும் சம்பிரதாயமாக நடந்துள்ள 4வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது. ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு நடக்கவுள்ளது.

 

The post பேட்டிங்கில் மிரட்டிய லுாயிஸ்: இமாலய இலக்கை ‘சேஸ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Lewis ,Chase ,West Indies ,St. Lucia ,T20 ,England ,Caribbean ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் தொடர் இன்று துவக்கம்...