×

சமூகத்தை பிளவுபடுத்தும் பாஜ வலையில் மக்கள் விழ வேண்டாம்: காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரிக்கை

உம்ரேட்: சமூகத்தை பிளவுபடுத்த நினைக்கும் பாஜ வலையில் யாரும் விழ வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரித்துள்ளார். “காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு தர நினைக்கிறது. நாம் பிரிந்திருந்தால் வீழ்ந்து விடுவோம். ஒற்றுமையாக இருந்தால் காங்கிரசின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பாதுகாப்பாக இருப்போம்” என பிரதமர் மோடி பேசி வருகிறார். மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா பேரவை தேர்தலையொட்டி நாக்பூர் மாவட்டம் உம்ரேட்டில் நேற்று நடந்த காங்கிரஸ் பேரணியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு மகா விகாஸ் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: பாஜ தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதை மேலும் வலுப்படுத்த பாஜவினர் முயற்சி செய்து வருகின்றனர். அதற்காகதான் எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு தர நினைப்பதாக காங்கிரஸ் மீது பழி போடும் கோஷத்தை பாஜ இப்போது செய்து வருகிறது. இது அனுமதிக்கப்பட கூடாது.

சத்ரபதி சிவாஜி மகாராஜ், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு வகைப்படுத்துவது சரியல்ல. காங்கிரசும், அதன் தலைவர்களும் நாட்டின் ஒற்றுமைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். பாஜவும், ஆர்எஸ்எஸ்ஸூம் நாட்டுக்காக எந்த பங்களிப்பும் செய்யவில்லை. மகாராஷ்டிராவில் மிரட்டல் மற்றும் கொள்ளை மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசை தோற்கடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த பேரவை தேர்தல் மிகவும் முக்கியமானது. எங்கள் கூட்டணியில் இருந்து விலகி பாஜவில் சேருபவர்கள் ஒன்றிய அமைப்புகளின் மிரட்டல்களுக்கு பயந்துதான் அவ்வாறு செல்கிறார்கள். 24 ஆண்டுகள் பாஜ ஆட்சி செய்த குஜராத் இன்னும் ஏன் வறுமையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் எந்த வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அதற்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காங்கிரஸ் பாதுகாத்ததால்தான் மோடியால் பிரதமராக முடிந்தது. இல்லையென்றால் அவர் எங்கேயே டீ விற்று கொண்டிருப்பார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இன்னும் பெண்களுக்கு வாக்களிப்பதில்லை. ஆனால் இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை உண்டு ” என்றார்.

 

The post சமூகத்தை பிளவுபடுத்தும் பாஜ வலையில் மக்கள் விழ வேண்டாம்: காங்கிரஸ் தலைவர் கார்கே எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Kharge ,Umrate ,SC ,ST ,OBC ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் மோதல்; பாஜ –...