×

மணிப்பூரில் முற்றிய வன்முறை போராட்டம் 4 எம்எல்ஏக்களின் வீடுகள் எரிப்பு: முதல்வர் இல்லத்தை தாக்கவும் முயற்சி, அரசுக்கு போராட்டக்காரர்கள் கெடு

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் முற்றியுள்ள வன்முறை போராட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் எரித்தனர். முதல்வர் பிரேன் சிங் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 6 பேரை கொன்ற தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு மெய்டீஸ் இனத்தினர் 24 மணி நேர கெடு விதித்துள்ளனர். மணிப்பூரில் இனக்கலவரம் காரணமாக கடந்த ஓராண்டாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே, ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களிலும் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.

ஆனாலும், போராட்டக்காரர்கள் நேற்று முன்தினம் இரவிலும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் 3 பாஜ மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை அவர்கள் தீ வைத்து எரித்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால், சிறு சேதங்கள் மட்டுமே ஏற்பட்டன. அந்த சமயத்தில் வீடுகளில் எம்எல்ஏக்கள் அவர்களின் குடும்பத்தினர் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எம்எல்ஏக்களின் வீடுகளை எரித்த கும்பல், இம்பாலின் கிழக்கில் உள்ள லுவாங்ஷாங்பாமில் உள்ள முதல்வர் பிரேன் சிங்கின் பூர்வீக வீட்டையும் தாக்க முயன்றனர்.

உடனடியாக அசாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் கொண்ட கூட்டுப் படையினர் 100 மீட்டர் முன்பாக போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சூட்டும் கூட்டத்தை கலைத்தனர்.முதல்வரின் வீட்டிற்கு செல்லும் பிரதான சாலையில் டயர்களை எரித்த கும்பல், சுமார் 3 கிமீ தொலைவில் உள்ள மந்திரிபுக்ரி பகுதியில் இரவு 11 மணி வரையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர். அதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெளிப்பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். கலவரம் வெடித்த இம்பாலின் 5 மாவட்டத்திலும் நேற்றும் பதற்றம் நீடித்தது. மேற்கு இம்பாலின் பாஜ எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது.தலைமை செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜிரிபாமில் 6 மெய்டீஸ் இனத்தவர்களை கொன்ற குக்கி தீவிரவாதிகள் மீது 24 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென மெய்டீஸ் போராட்டக்குழுவினர் அரசுக்கு கெடு விதித்துள்ளனர். இதனால் மீண்டும் போராட்டம் வெடிக்குமோ என இம்பால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜிரிபாம் நகரிலும் நேற்று முன்தினம் 2 தேவாலயங்களையும், பொதுமக்களின் சில வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தது குறிப்பிடத்தக்கது.

* பிரசாரத்தை ரத்து செய்தார் அமித்ஷா
மணிப்பூர் கலவரத்தை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் நேற்று பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார பேரணிகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரத்து செய்தார். உடனடியாக டெல்லி திரும்பிய அவர் மணிப்பூர் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

* பாஜ அரசுக்கு ஆதரவை திரும்ப பெற்றது என்பிபி
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேசிய மக்கள் கட்சி (என்பிபி) பாஜ அரசுக்கு தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக நேற்று அறிவித்தது. பாஜ முதல்வர் பிரேன் சிங், மணிப்பூரில் அமைதியையும் இயல்புநிலையையும் மீட்டெடுப்பதில் தோல்வி அடைந்திருப்பதால் கூட்டணியிலிருந்து விலகுவதாக பாஜ தேசிய தலைவர் நட்டாவுக்கு என்பிபி கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கன்ராட் சங்மா எழுதிய கடிதத்தில் கூறி உள்ளார்.

என்பிபி கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். மொத்தம் 60 எம்எல்ஏக்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பலம் தற்போது 46 ஆக குறைந்துள்ளது.

* ஒன்றிய அரசுக்கு மாநில அரசு கடிதம்
மணிப்பூரில் ஜிரிபாம் உட்பட பதற்றம் நிறைந்த 6 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 14ம் தேதி மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தியது. சம்மந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, இதை நீக்க வேண்டுமென மணிப்பூர் மாநில அரசு தரப்பில் நேற்று கடிதம் எழுதப்பட்டது.

* சுட்டுக் கொல்லப்பட்ட 10 குக்கி இளைஞர்கள்
ஜிரிபாம் பகுதியில் சிஆர்பிஎப் படையினருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 10 குக்கி இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல் சுராசந்த்பூருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 10 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பிறகே, உடல்கள் அடக்கம் செய்யப்படும் என பழங்குடியினர் தலைவர்கள் அமைப்பு நேற்று அறிவித்தது.

* மணிப்பூர் எரிய பாஜ விரும்புகிறது
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘பாஜவின் இரட்டை என்ஜின் ஆட்சியில் மணிப்பூர் ஒற்றுமையாகவும் இல்லை, பாதுகாப்பாகவும் இல்லை. 2023 மே மாதம் முதல் தாங்க முடியாத வலி, பிளவு, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில மக்களின் எதிர்காலத்தை அழித்து விட்டது. தனது வெறுப்பூட்டும் அரசியலுக்கு உதவுவதால் மணிப்பூர் எரிக்கப்பட வேண்டும் என்றே பாஜ விரும்புகிறது.

கடந்த 7ம் தேதியிலிருந்து இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கலவரம் இல்லாத பகுதியிலும் வன்முறைகள் பரவி வருகின்றன. உங்களை மணிப்பூர் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதிவில், ‘‘மணிப்பூரின் சமீபத்திய வன்முறை கவலை அளிக்கிறது. பிரதமர் மோடி ஒருமுறையாவது மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்க உழைக்க வேண்டும்’’ என்றார்.

 

The post மணிப்பூரில் முற்றிய வன்முறை போராட்டம் 4 எம்எல்ஏக்களின் வீடுகள் எரிப்பு: முதல்வர் இல்லத்தை தாக்கவும் முயற்சி, அரசுக்கு போராட்டக்காரர்கள் கெடு appeared first on Dinakaran.

Tags : Manipur ,Imphal ,Bran Singh ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு