சென்னை: தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மத்திய அரசின் வரிவருவாயை மத்திய – மாநில அரசுகள் எந்த விகிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் விவாதிப்பதற்காக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16ம் நிதி ஆணையத்தின் குழு 4 நாள் பயணமாக சென்னைக்கு வந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோருடன் நாளை இந்தக் குழு நடத்தவிருக்கும் கலந்தாய்வுகள் பயனளிக்க வேண்டும்.
மத்திய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு இப்போதுள்ள 41 விழுக்காட்டில் இருந்து 50% ஆக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எவ்வளவு வரி வருவாய் வசூலிக்கப்படுகிறதோ, அதில் 50 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கு வழங்கும் வகையில் நிதிப்பகிர்வுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
அதேபோல், செஸ் மற்றும் கூடுதல் தீர்வைகளை வசூலிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். அது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசும், நிதி ஆணையமும் கருதினால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் பகிர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நிதி ஆணையக் குழுவிடம் இதை தமிழக அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் 50 விழுக்காட்டை தமிழகத்திற்கே ஒதுக்க நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.