×

டிரம்ப் வெற்றியால் டாலர் சிட்டியில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் : உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா, இந்தியாவுடனான வர்த்தக உறவு கடந்த காலங்களில் சிறப்பாக அமைந்தது போல புதிய அதிபர் பொறுப்பேற்ற பின்பும் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஜவுளி, மருந்து மற்றும் ரசாயனப்பொருட்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே, டிரம்ப் அதிபராக இருந்தபோது அவர் தொழில்துறையினை கையாண்ட விதம் மற்றும் சீனாவை தனக்கு எதிரான வலுவான போட்டி நாடாக கருதும் எண்ணம் ஆகியவை இந்தியாவுடன் அமெரிக்க வர்த்தக உறவு அதிகரிக்க கூடிய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியிலேயே ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

ஐரோப்பியா யூனியனுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு உக்ரைன்- ரஷ்யா போர் மிகப்பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியது. இந்தியாவின் பல்வேறு சிறு, குறு நடுத்தர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் இதனால் பாதிப்படைந்தனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் போர் நிறுத்த நடவடிக்கையை கையிலெடுத்தால் இந்தியா மட்டுமல்லாது ஐரோப்பியா யூனியனுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறுகையில்,“அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே, அவரது ஆட்சியின்போது இந்தியா- அமெரிக்க ஜவுளி ஏற்றுமதி நல்ல நிலையில் இருந்தது. இந்தியாவிற்கு ஒரு சகோதர நட்பு நாடாகவே அமெரிக்க உள்ளது. திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு 30 சதவீத ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 10 சதவீகித ஆர்டர்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறோம்’’ என்றார்.

திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் (டீயா) சங்க செயலாளர் செந்தில் கூறுகையில்,“அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி திருப்பூர் சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை துறையினரிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி கொடுத்துள்ளார். ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக கொரோனா தொற்று காலத்திற்கு பின் 3 ஆண்டு காலம் ஐரோப்பியா யூனியனில் உள்ள 27 சிறு நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் பல நூறு கோடி பாதிப்படைந்தது. போர் நிறுத்தம் ஏற்படுமானால் மீண்டும் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறும். ஐரோப்பிய நாட்டின் மீதான சீனாவின் ஆதிக்கம் குறையும் பட்சத்தில் இந்தியாவின் ஜவுளிச்சந்தை அதிகரிக்ககூடும்’’ என்றார்.

The post டிரம்ப் வெற்றியால் டாலர் சிட்டியில் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் : உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trump ,Dollar City ,America ,India ,US ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...