×

மாயமான 6 பேரும் கொலையானதால் பதற்றம் மணிப்பூரில் வன்முறை வெடித்தது: பா.ஜ அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் மீது தாக்குதல்

* முதல்வரின் மருமகன் வீடும் முற்றுகை, வீதிகளில் அமர்ந்து பெண்கள் போராட்டம், பள்ளிகளுக்கு விடுமுறை கடைகள் அடைப்பு, 144 தடை உத்தரவு மீண்டும் அமல்

இம்பால்: மணிப்பூரில் மாயமான 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்களின் கொலைக்கு நீதி கேட்டு 2 பா.ஜ அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் வீடுகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் நீடிக்கும் இனக்கலவரத்தின் ஒருபகுதியாக கடந்த திங்கள்கிழமை(11ம் தேதி) ஜிரிபாம் மாவட்டம் போராபெக்ராவின் ஜகுராதோர் கராங் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கடைகளை தீ வைத்து எரித்ததுடன், அங்கிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் முகாம் உள்பட சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தீவிரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 6 மாத குழந்தை உள்பட 3 குழந்தைகள், 3 பெண்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றதுடன், மெய்டீஸ் இனத்தை சேர்ந்த 2 ஆண்களையும் தீ வைத்து எரித்து கொன்றனர். இதனால் ஜிரிபாம் மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வந்தது. மாயமான 6 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை போராபெக்ரா மாவட்டத்தில் இருந்து 16கி.மீ. தொலைவில் மணிப்பூர் – அசாம் எல்லையில் ஜிரி நதி – பக்ரா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 2 குழந்தைகள், ஒரு பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. அதேபகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேரின் உடல்கள் உடல் கூராய்வுக்காக அசாமின் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தகவல் பரவியதால் இம்பால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு இம்பாலின் குவாகீதெல், சகோல்பந்த் தேரா உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை தடுத்தனர். இதன் காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அங்குள்ள வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டன. மேலும் 6 பேரின் மரணத்துக்கு நீதி கேட்டு மணிப்பூர் பா.ஜ அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

மேற்கு இம்பால் மாவட்டம் லாம்பெல் சானகீதல் பகுதியில் வசிக்கும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சபம் ரஞ்சன் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இதேபோல் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் எல்.சுசிந்த்ரோ சிங் வீடும் முற்றுகையிடப்பட்டது. சகோல்கந்த் பகுதியில் வசிக்கும் முதல்வர் என்.பிரேம்சிங்கின் மருமகனும், பாஜ பேரவை உறுப்பினருமான ஆர்.கே.இமோவின் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், “6 பேரின் கொலைக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும்” என முழக்கமிட்டனர்.

கெய்ஷாம்தோங் தொகுதி சுயேச்சை உறுப்பினர் சபம் நிஷிகாந்த் சிங்கின் வீட்டை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்கள், அவர் மாநிலத்தில் இல்லாததால், அவருக்கு சொந்தமான செய்தித்தாள் அலுவலக கட்டிடம் மீது தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பால் மாவட்டத்தில் பதற்றம் நீடிப்பதால் அங்கு நேற்று மாலை 4.30 மணியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ளதால் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

* 11 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
மணிப்பூரில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 11 பேரின் உடல்கள் அசாமின் சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க கோரி அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் செய்ததுடன், காவல்துறை அதிகாரிகளை தாக்கினர். இதையடுத்து அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து 11 பேரின் உடல்களும் விமானம் மூலம் நேற்று சுராசந்த்பூருக்கு கொண்டு செல்லப்பட்டன.

* பாதுகாப்பு படைக்கு அதிகாரம்
ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள உத்தரவில், “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுத்து, அமைதியை கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் விதமாக வன்முறையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பிரதமர் மோடி மணிப்பூருக்கு போகாதது ஏன்? – காங். கேள்வி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “உயிரியல் பிறப்பல்லாத பிரதமர் அடுத்த 3 நாள்களுக்கு வெளிநாடு செல்கிறார். ஆனால் 2023 மே முதல் மிக மோசமாக பிளவுப்பட்டிருக்கும் மணிப்பூருக்கு செல்ல மறுப்பது ஏன்? அவரது இந்த மறுப்பு புரிதலுக்கு அப்பாற்பட்டது” என விமர்சித்துள்ளார்.

 

The post மாயமான 6 பேரும் கொலையானதால் பதற்றம் மணிப்பூரில் வன்முறை வெடித்தது: பா.ஜ அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,BJP ,CM ,Amal Imphal ,Dinakaran ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...