×

கோவை விமான நிலையத்தில் பரபரப்பு: துப்பாக்கியுடன் பயணம் கேரள அரசியல் பிரமுகர் சிக்கினார்

பீளமேடு: கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் பயணம் செய்ய முயன்ற கேரள மாநில அரசியல் பிரமுகர் சிக்கினார். இதனால் பரபரப்பு நிலவியது. கோவை விமான நிலையத்தில் இன்று காலை 6.55 மணிக்கு தனியார் விமானம், பெங்களூரு புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பயணியின் சூட்கேசை ஸ்கேனரில் சோதனை செய்தபோது, ஒரு துப்பாக்கி (பிஸ்டல்) மற்றும் 7 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்து, அந்த பயணி மற்றும் அவருடன் வந்த மற்றொருவரிடமும் விசாரித்தனர். இதையடுத்து 2 பேரையும் பீளமேடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கி கொண்டு வந்தவர் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியை சேர்ந்த தங்கல் (60) என்பது தெரியவந்தது. இவர் கேரள மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி பிரமுகர். அவருடன் வந்த மற்றொருவர், அதே பகுதியை சேர்ந்த அப்துல்கபூர் (60). இருவரும் கோவையிலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். எதற்காக துப்பாக்கியை விமானத்தில் கொண்டு செல்ல முயன்றார்? துப்பாக்கி எடுத்து செல்வது குறித்து முன்கூட்டியே விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்காதது ஏன்? துப்பாக்கி வைத்து கொள்ள லைசென்ஸ் உள்ளதா? என்பது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post கோவை விமான நிலையத்தில் பரபரப்பு: துப்பாக்கியுடன் பயணம் கேரள அரசியல் பிரமுகர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Govai airport ,Kerala ,Peelamedu ,Goa airport ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்