×

மரபு மாறா மெஸ்!

நன்றி குங்குமம் தோழி

ஒரு பெண் தனித்துவத்தோடு உணவகத்தை முன் நின்று நடத்துவதே கடினம். அதிலும் குறிப்பாக ஆள்அரவமற்ற தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே நம்பி உணவகத்தை நடத்துவதென்றால்?

பெரும்பாலும் பெண்கள் வீட்டில் இருந்து உணவை சமைத்துக் கொடுப்பார்கள். அல்லது மெஸ் மாதிரியான உணவகங்களை வீட்டில் வைத்தே நடத்துவார்கள். ஆனால் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வழியில், தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் தாண்டி 3வது கிலோ மீட்டரில், இடது புறமாக விசாலமான முறையில் ஒரு மோட்டல் உணவகத்தை, முழுக்க முழுக்க அசைவ விருந்து உணவுக்காக ‘உப்புக்கண்டம் மெஸ்’ என்கிற பெயரில் நடத்தி வருகிறார் ஜெனியா சாலமன்.

‘‘அசைவத்திற்கும் உப்பிற்கும் தொடர்பு ரொம்பவே அதிகம். அதிலும் உப்புக்கண்டம் தெரியாத அசைவப் பிரியர்களே இருக்க மாட்டார்கள் என்பதால் உணவகத்திற்கான பெயரை ‘உப்புக்கண்டம் மெஸ்’ என அடையாளப்படுத்தினோம்’’ என்றவர், ‘‘இந்தப் பெயர் இன்று எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் நன்றாகவே பதிந்திருக்கிறது’’ எனப் புன்னகைக்கிறார். காலை 11 மணியில் தொடங்கி இரவு 11 மணி வரை இயங்கும் இந்த உணவகத்தை, தேசிய நெடுஞ்சாலையில், பெண்ணாய் துணிந்து நின்று நடத்துகிற கதையினை ஜெனியாவிடம் பேசியதில்…

‘‘மண் சட்டி சமையல் தெரியும். கல் சட்டி சமையல் தெரியுமா? ‘மரபு மாறா அசைவம்’ என்கிற டேக் லைனோடு எங்கள் உணவகத்தில் தயாராகும் உணவுகளை கல் சட்டியில் சமைத்து, கல் சட்டியில் பறிமாறுகிறோம்’’ என்றவர், ‘‘குடும்பமாய் பயணித்தாலும் சரி, நண்பர்களுடன் பயணித்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக பயணித்தாலும் சரி, பயணங்களில் இருக்கும்போதுதானே, மக்கள் வாய்க்கு ருசியான உணவுகளை சுவைக்க நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக, மக்கள் நெடுஞ்சாலைகளில் தேடிச்சென்று தங்கள் வாகனத்தை நிறுத்துவது, பெரும்பாலும் சைவ உணவகங்களாகவே இருக்கும். காரணம், உணவு தயாரிப்பின் மீதான பயம்தான். அதுவே நாம் தேடுகிற சுகாதாரமான, ஆரோக்கிய உணவு அசைவ உணவாக அமைந்துவிட்டால் பயணம் கூடுதல் சிறப்புத்தானே’’ என்கிற ஜெனியா மேலும் தொடர்ந்தார்.

‘‘நெடுஞ்சாலை உணவகங்கள் பாதுகாப்பானதாக இருக்குமா? குறிப்பாக அசைவ உணவுகளை நம்பி சாப்பிடலாமா? போன்ற கேள்விகள்தான் பயணத்தில் நம் மனதைக் குடைந்து, உணவு சாப்பிடுவதில் பயத்தை ஏற்படுத்தும். இந்த எண்ணத்தை மாற்ற நினைத்தே நாங்கள் மக்கள் விரும்புகிற ஒரு திருப்தியான அசைவ உணவகத்தை சிறப்பாக நெடுஞ்சாலையில் நடத்தலாமென முடிவு செய்தோம். என் கணவரோடு அமர்ந்து பேசி, இந்த இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்தேன். மேல்மருவத்தூர் தாண்டி அச்சரப்பாக்கத்தில் எனக்கு வீடு என்பதால், நானும் என் கணவருமாக இணைந்தே நடத்தி வருகிறோம்.

எங்களின் உணவகத்தின் சிறப்பே கல்சட்டியில் மீன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சின்ன வெங்காயம், வர மிளகாய் போட்ட கருவாடு தொக்கு, நண்டு தொக்கு, நல்லெண்ணெயில் வறுத்த உப்புக்கண்டம், மாசி சம்பல், இடிச்ச இஞ்சி பூண்டு கோழி, இத்துடன் கூட்டுப் பொரியல், துவையல், ரசம், சாம்பார், வத்தல் குழம்பு இதெல்லாம் சேர்ந்து ஒரு காம்போவாக அன் லிமிட்டெட்டாக வரும். விருந்து முடியும் போது, தேங்காய்ப்பால் அரிசி சேர்ந்த பாயசத்தோடு உணவை முடித்து வைப்போம்.

வாடிக்கையாளருக்கு கூடுதலாக சைட் டிஸ் தேவைப்பட்டால் தனியாக ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். சைட் டிஸ் உணவாக இடிச்ச இஞ்சி பூண்டு கோழிக் கறி, மட்டன் உப்புக்கறி, மட்டன் உப்புக் கண்டம், மாசி சம்பல், தென்னாங்குன்னி சம்பல், கடமா தொக்கு, நண்டு மசாலா, காடை மசாலா, காடை மிளகு வறுவல், நல்லி மிளகு வறுவல், சிரட்டை இறால் வறுவல் போன்றவை கிடைக்கும். ஆர்டர் பெற்று லைவாகத் தயாரிப்பதால் சுவை தூக்கலாக இருக்கும்’’ என்கிறார் இவர்.

‘‘இரவு உணவாக இட்லி மீன் குழம்பு, இட்லி நாட்டுக்கோழி குழம்பு, இட்லி கருவாடு தொக்கு, சென்னாங்குன்னி பொடி தோசை, மாசி சம்பல் தோசை, மட்டன் கறி தோசை, சிக்கன் கறி தோசை, இறால் கறி தோசை, ஆப்பம் மட்டன் நல்லி இவற்றுடன் வட இந்திய உணவு வகைகள், சைனீஸ் உணவுகளும் கிடைக்கும்.எங்கள் உணவகத்தில் அசைவ உணவுக்கான கிளீனிங் புராசஸ் ஹைஜீனிக்கானது. குறிப்பாக, இறாலின் நடுவில் உள்ள கருப்பு நிறக் குடலை பெரும்பாலும் உணவகங்களில் நீக்க மாட்டார்கள் என்பதால், இறால், நண்டு வகை கடல் உணவுகளை உணவகங்களில் சாப்பிட பலரும் யோசிப்பார்கள்.

ஆனால் என் உணவகத்தில் மீன், நண்டு, இறால், ஆடு, கோழி போன்றவை வெளியில் இருந்து உள்ளே வரும்போதே முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட நிலையில் ஃப்ரெஷ்ஷாக வரும். எங்களின் கிளீனிங் ஏரியா ரொம்பவே பெரியது. உணவகத்திற்குள் வந்த பிறகும் முறையாக அவற்றை நாங்கள் சுத்தப்படுத்துவோம்.

அதேபோல் சுவையிலும் குறை வைக்காமல் பக்காவாக வீட்டில் சமைத்து சாப்பிடுவது போல, மசாலாப் பொருட்களை வயிற்றைப் பாதிக்காத அளவில் இணைத்து மனப்பூர்வமாக சமைத்து தருவதால் சாப்பிட்ட 3 மணி நேரத்திலேயே, வயிற்றுக்கு எந்த உபாதையும் தராமல் அசைவ உணவு செரிமானம் அடைந்துவிடும்’’ என்றவர், ‘‘எங்கள் உணவகத்தின் சூழல்(ambience) விசாலமாக பார்க்க மிகச் சிறப்பான தோற்றத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும். குடும்பமாக வீட்டில் அமர்ந்து சாப்பிடுவதைப்போல உணவகத்தின் சாப்பிடும் இடம் விசாலமாக வசதியாக இருக்கும்.

‘‘வரவேற்பறையில் கடவுளையும், மதத்தையும் அடையாளப்படுத்துகிற புகைப்படங்களை வைக்காமல், சாதி, மதம் கடந்து சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை என போராடிய போராளிகள் படங்களை, தேசப்பிதாவில் தொடங்கி அம்பேத்கர், பெரியார், மதர் தெரசா, காமராஜர், அண்ணா என ஐக்கானிக் தலைவர்களின் புகைப்படங்களை, அவர்கள் சிந்தனைகள் தாங்கிய வாசகங்களுடன் இணைத்து படமாக்கி வரவேற்பு அறையினை அலங்கரித்துள்ளோம். கூடவே உணவின் சிறப்பை விளக்கும் வாசகங்கள், கல்சட்டி சமையலின் மகத்துவம், கடல் உணவுகளின் சிறப்புகள் ஆங்காங்கே விளக்கி வைக்கப்பட்டிருக்கும்.

உணவகத்தின் உள்ளே இரண்டு ஏசி டைனிங் ஹால் மற்றும் ஒரு நான் ஏசி டைனிங் ஹாலுடன், உணவு தயாரிக்கும் இடம் மட்டுமே 1000 சதுரடிக்கு மேல் உள்ளது. ஒரே நேரத்தில் 50 கார்களை நிறுத்தும் அளவுக்கான பார்க்கிங் வசதி எங்கள் உணவகத்தின் கூடுதல் சிறப்பு’’ என்றவாறு விடைபெற்றார் ஜெனியா சாலமன்.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: கங்காதரன்

The post மரபு மாறா மெஸ்! appeared first on Dinakaran.

Tags : National Highway ,Dinakaran ,
× RELATED நான்கு வழிச்சாலையாகிறது தஞ்சாவூர் – ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை