×
Saravana Stores

ஐயப்ப பக்தர்களை வரவேற்க தயாராகும் கன்னியாகுமரி; சபரிமலை சீசன் நாளை தொடக்கம்: பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை


நாகர்கோவில்: சபரிமலை சீசன் நாளை (16ம் தேதி) தொடங்குவதை முன்னிட்டு ஐயப்ப பக்தர்களை வரவேற்க கன்னியாகுமரி தயாராகி வருகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களும், பல்லாயிரம் பேர் வருவது வழக்கம். இந்த ஆண்டு நாளை கார்த்திகை மாதம் பிறக்கிறது. கார்த்திகை 1ம்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடை திறக்கப்படும். இதனால், கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலைக்கு தென் மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருவது வழக்கம்.

அப்போது கன்னியாகுமரிக்கும் அவர்கள் வந்து கடலில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயங்களை தரிசித்து செல்வதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மேற்பார்வையில், காவல்துறை, ேபரூராட்சி, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* கன்னியாகுமரியில் அரசு விருந்தினர் மாளிகை முதல் காந்தி மண்டபம் வரை, சாலையின் கிழக்கு பகுதியில், 27 கடைகளும், மேற்கு பகுதியில் 28 முதல் 84 எண் வரை உள்ள கடைகளும், சன்னதி தெருவில் 85 முதல் 100 எண் வரை கொண்ட தற்காலிக சீசன் கடைகளும் அமைக்கப்பட உள்ளன. இதில் 67 கடைகள் ஏலம் முடிந்த நிலையில் மீதம் உள்ள கடைகளுக்கு இன்று ஏலம் நடைபெறுகிறது.
* கடற்கரை சாலையில் 78 எல்இடி விளக்குகள் ஏற்கனவே உள்ளன. இதுதவிர முதல்வர் வருகையை முன்னிட்டு, உயர் கோபுர மின்விளக்குகள் உள்பட 108 விளக்குகள் திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
* திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று விடாமல் தடுக்க பாதுகாப்பு மிதவைகள் பேரூராட்சியால் மிதக்க விடப்பட உள்ளன.

* சன்னதி தெரு, திரிவேணி சங்கமம், காட்சி கோபுரம் ஆகிய பகுதிகளில் கழிவறைகள் உள்ளன. தற்போது பக்தர்கள் வசதிக்காக சன் ெசட் பாயின்ட் பகுதியில் கூடுதல் பயோ மைனிங் முறையிலான தற்காலிக கழிவறைகள் தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் அமைக்கப்பட உள்ளது.
* வழக்கமான தூய்மை பணியாளர்களுடன், சபரிமலை சீசன காலத்தில் 24 மணி நேரமும் தூய்ைம பணியில் ஈடுபட சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
* காவல்துறை மூலம் கடற்கரை உள்பட முக்கிய சந்திப்புகள் என கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டாலும், காந்தி மண்டபம் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

லாட்ஜ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
சபரிமலை சீசனையொட்டி கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து காவல் துறை, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, லாட்ஜ் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் ேபசியதாவது: கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களை பாதுகாப்பது நமது கடமை. தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமராவை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். லாட்ஜில் தங்க வருபவர்களிடம் ஆதார் கார்டு வாங்கி சோதனை செய்த பிறகே அறை ஒதுக்கப்பட வேண்டும். சில சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் வேறு பெயரில் அறையை முன்பதிவு செய்துவிட்டு வருகின்றனர்.

எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவரிடமும் ஆதார் கார்டை வாங்கி பரிசோதிக்க வேண்டும். சந்தேகப்படும் வகையில் யாரேனும் லாட்ஜில் தங்கினால் உடனே காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சரவணன், பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, சுகாதார அலுவலர் முருகன், லாட்ஜ் உரிமையாளர் சங்க தலைவர் ராஜ் கோமஸ், தாமஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அச்சிடப்பட்ட தாளில் உணவு தந்தால் கடும் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் கூறியது, கன்னியாகுமரியில் ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை அடுத்து, ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை, மாசுக்கட்டுபாட்டு துறை, பேரூராட்சியுடன் இணைந்து நெகிழி இல்லாத கன்னியாகுமரி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பைகள், கப்புகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட கிரேடு கொண்ட பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்தலாம். ெதர்மாகோல் கன்டெய்னர்கள் பயன்படுத்தக் கூடாது.

அச்சிடப்பட்ட தாளில் உணவு பொருட்களை பொட்டலம் செய்வதோ, வடை வகைகள் வைத்து உண்ண கொடுப்பதோ கூடாது. இதற்காக வாரத்திற்கு இருமுறை திடீர் மாஸ் ரெய்டு நடத்தப்படும். முதல் முறை சிக்கினால், ₹2 ஆயிரமும் 2ம்முறை என்றால் ₹5 ஆயிரம், 3வது முறை என்றால் ₹10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். உரிமம் ரத்து ெசய்யப்படும். சபரிமலை சீசனை முன்னிட்டு, இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும். இதுவரை 60 உணவகங்களில் ₹1.50 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. என்றார்.

The post ஐயப்ப பக்தர்களை வரவேற்க தயாராகும் கன்னியாகுமரி; சபரிமலை சீசன் நாளை தொடக்கம்: பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Ayyappa ,Sabarimala ,Nagercoil ,Dinakaran ,
× RELATED சரணம் ஐயப்பா… சாமி சரணம் ஐயப்பா…