×

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கழிவு சேமிப்பு அறை இடம் மாறுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு


விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்-ரே பிரிவு அருகே செயல்படும் மருத்துவ கழிவு சேமிப்பு அறையை வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் இராமமூர்த்தி சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இச்சாலையின் தென் பகுதியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. வடக்கு பகுதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட கட்டடத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் தரை தளத்தில் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன் ஆகிய பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதனால், அப்பகுதியில் காலை நேரங்களில் புறநோயாளிகள், அவர்களின் உறவினர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

மேலும் முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த தானம் செய்யும் இடம், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, இசிஜி, காய்ச்சல் பிரிவு, முதியோர் சிகிச்சை பிரிவு, மருந்து மாத்திரைகள் வாங்கும் இடம், எலும்பு முறிவு பிரிவு, கட்டு போடும் இடம் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, இந்த தளத்திலும் பொது மக்கள் அதிகமாக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், மருத்துவமனையில் உள்ள தென் பகுதி வாசலில் இருந்து எக்ஸ்ரே மையம் செல்லும் வழியில் மருத்துவ கழிவுகள் சேமிக்கும் அறை உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர், கூடுதலான நோய் பாதிக்கும் நிலை உள்ளது. மேலும், பலருக்கு ஒவ்வாமை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மருத்துவமனை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென வெளி நோயாளிகள் மற்றும் பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மருத்துவக் கழிவு சேமிப்பு அறையை வேறு பகுதிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், டிஜிட்டல் எக்ஸ்ரே மையம் அருகே மருத்துவ கழிவுகள் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் கடந்து செல்லும் போது துர்நாற்றம் அடிக்கிறது.

மேலும் எக்ஸ்ரே மையத்திற்கு நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் எக்ஸ்ரே எடுப்பதற்காக வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ கழிவுகளினால் தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகள் சேமிப்பு அறையை மாற்ற வேண்டும் என்றார்.

The post அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக்கழிவு சேமிப்பு அறை இடம் மாறுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Government Medical College Hospital ,Virudhunagar ,Virudhunagar Government Medical College Hospital ,Government Medical Center ,Ramamurthy Road, Virudhunagar ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவக் கல்லூரி...