×

வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்கு பிறகு சுத்தப்படுத்த நெறிமுறைகள் உள்ளதா..? இந்திய, மாநில தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்குப் பிறகு சுத்தப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் ஏதேனும் உள்ளதா என்று விளக்கம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல்களின் போது, வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அறிவிப்புகள், வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளி, கல்லூரிகளின் சுவர்களில் ஒட்டப்படுகின்றன.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு இந்த அறிவிப்புகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்படுவது இல்லை எனக் கூறி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், பள்ளிகளின் சுவர்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சுதந்திரப் போராட்ட தலைவர்கள் மற்றும் தேச தலைவர்கள் படங்கள், கதைகள், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை தூண்டும் படங்கள் வரையப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஒட்டுவதால் பள்ளி சுவர்கள் பாதிக்கப்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்திய உணவுக் கழிவுகள், உணவுப் பொட்டல கழிவுகள் மற்றும் காகிதப் பொருட்கள் அகற்றப்படுவதில்லை. பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் தான் சுத்தப்படுத்துகிறார்கள். தேர்தல் முடிந்தபின் வாக்குச்சாவடியை சுத்தம் செய்ய எவ்வித பணமும் ஒதுக்கீடு செய்வதில்லை. எனவே, வாக்குச்சாவடிகளில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகளை ஒட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், தேர்தலுக்கு பிறகு வாக்குச் சாவடியை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யவும் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், தேர்தலில் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்கு பிறகு சுத்தம் செய்து கொடுப்பதற்கு வழிகாட்டி நெறிமுறைகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து டிசம்பர் 12ம் தேதி தெரிவிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

இறந்த, இடம் மாறியவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க கோரி வழக்கு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளதால், ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்காக, வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இந்நிலையில், தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மதுரை வீரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், இறந்த மற்றும் இடம் மாறிய வாக்காளர்களின் பெயர்களை நீக்காவிட்டால், அந்த பெயர்களில் கள்ள ஓட்டுக்கள் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் பி.நெடுஞ்செழியன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் 28ம் தேதி பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post வாக்குச்சாவடிகளாக பயன்படுத்தப்படும் பள்ளிகளை தேர்தலுக்கு பிறகு சுத்தப்படுத்த நெறிமுறைகள் உள்ளதா..? இந்திய, மாநில தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Indian, State Election Commission ,High Court ,Chennai ,Chennai High Court ,State Election Commission ,Dinakaran ,
× RELATED விடுதலை-2 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு