×

காவல்துறை-சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து அரசு மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு

வேலூர்: காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக அனைத்து மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து பாதுகாப்பு தணிக்கை நடத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் முறையாக செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

போதிய மின்விளக்கு வசதிகள் இருத்தல் அவசியம். மருத்துவமனை புறக்காவல் நிலையங்களில் தேவையான எண்ணிக்கையில் போலீசார் பணியமர்த்தப்பட வேண்டும். அனைத்து டாக்டர்களும், சுகாதாரப் பணியாளர்களும் அவசர உதவி தேவைப்படும்போது காவல் உதவி செயலி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அனுப்பலாம். மருத்துவமனை பாதுகாப்பு குழு, வன்முறை தடுப்பு குழுக்களை அமைக்கலாம். இரவு நேர பாதுகாவலர்களை அமைக்க வேண்டும். இந்த நடைமுறைகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post காவல்துறை-சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து அரசு மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Department of Public Health ,Dr ,Balaji ,Government High Special Hospital ,Kindi, Chennai ,Department ,Public Health Department ,Dinakaran ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...