×

சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்.. பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது : அறநிலையத்துறை

சென்னை : சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும் என அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜர் கோயில் கொடிமரத்தை அகற்றிவிட்டு, வேறு இடத்தில் புதிய கொடிமரம் அமைக்க இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லை கோவிந்தராஜரின் பக்தர் ஹரிஹரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கொடிமரம் தொடர்பாக சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையில் 1860ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமான வழக்கில் இரு தரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.

அதன்படி, கொடிமரத்தை அலங்காரமாக வைத்துக் கொள்ளலாம். எந்த பூஜையும், பிரம்மோற்சவ விழாவும் நடத்தக் கூடாது என சிதம்பரம் முன்சீப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 160 ஆண்டுகளாக எந்த பிரமோற்சவமும் நடத்தப்படவில்லை. தற்போது கொடிமரத்தை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் அமைப்பது, முன்சீப் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. மேலும், சடங்கு – சம்பிரதாயங்களுக்கு எதிரானது. எனவே, தில்லை கோவிந்தராஜர் கோயிலில் புதிய கொடிமரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். புதிய கொடிமரம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புதிய கொடி மரத்தை அமைத்துவிட்டு பின்னர் பிரம்மோற்சவம் நடத்துவதற்கு அறநிலை துறை திட்டமிட்டுள்ளது என்பதால் புதிய கொடிமரத்தை அமைக்க கூடாது என வாதிடப்பட்டது. இதனை மறுத்த அறநிலையைத் துறை தரப்பு, ” பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளதால் தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது. கொடிமரம் சேதமடைந்துள்ளதால் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்,” என்று உறுதி தெரிவித்தார்.அறநிலையத்துறை தரப்பின் இந்த வாதம் குறித்து ஆணையர் ஒரு வாரத்தில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் மட்டுமே அமைக்கப்படும்.. பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது : அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Tags : Chidambaram Natarajar Temple ,Chennai ,Chidambaram Dilla Natarajar temple ,Chennai High Court ,Dilla ,Govindarajar ,Chidambaram ,Natarajar ,Temple ,Brammorashavam ,Ministry of Finance ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோபுர சிலைகள் உடைந்தது