×
Saravana Stores

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

*முழு ஒத்துழைப்பு வழங்க மாவட்ட பார்வையாளர் வேண்டுகோள்

ஊட்டி : இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரியில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் – 2025, தொடர்பாக கடந்த மாதம் 29ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 3 தொகுதிகளிலும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர்.
அக்டோபர் 29ம் தேதி துவங்கி, நவம்பர் 28ம் தேதி வரை சுருக்க முறை திருத்தம் நடக்கிறது.

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உப்பு கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் தலைமை வகித்து பேசியதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் செம்மையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

1-1-2025 அன்று 18 வயது நிறைவடைந்த அதாவது 1-1-2006 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கவும், பெயர் நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த மாதம் 28ம் தேதி வரை ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் அனைத்து வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய படிவங்கள் பெற்று உரிய ஆதாரங்களை இணைத்து பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். நவ 16,17 மற்றும் 23 மற்றும் 24ம் தேதிகளில் மூன்று தொகுதிகளிலும் உள்ள 690 வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இதிலும் பொதுமக்கள் விண்ணப்பங்கள் அளிக்கலாம். 85 வயதிற்கு மேற்பட்டுள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் குறைவான வாக்குபதிவான வாக்குச்சாவடி இடங்களில் தேவையான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எவரும் விடுபடாத வகையில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை வாக்காளர் அனைவரும் பயன்பெறும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் செம்மையாக வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஷ்வரன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் டிசம்பர் 24ம் தேதி ஆகும். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சதீஸ்குமார், ஆர்டிஓ-க்கள் சதீஸ், செந்தில்குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே பரபரப்பு: வாகனங்களை வழிமறித்த காட்டு மாடு