×

தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு, 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாநகராட்சியானது 70 வார்டுகளை உள்ளடக்கிய 5 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 33வது வார்டுக்கு உட்பட்ட தாம்பரம் சானடோரியம் பகுதியில் பல்வேறு திட்ட நிதிகளின் கீழ், ரூ.43.40 கோடி மதிப்பில், தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று தாம்பரம் சானடோரியம் பகுதியில் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, கட்டுமான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்த அலுவலக கட்டிடம் மொத்தம் உள்ள 18,980 சதுர மீட்டர் பரப்பளவில் (4.69 ஏக்கர்) 12,441 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கட்டப்படவுள்ளது. தரை தளத்தில் 90 நான்கு சக்கர வாகனங்கள், 355 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

முதல் தளத்தில் மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் அலுவலகம், மாமன்ற கூடம், இ-சேவை மையம், காத்திருப்பு அறை, கலந்தாய்வு கூடம், 2ம் தளத்தில் ஆணையர், துணை ஆணையர் உதவி ஆணையர்கள், நகரத் திட்டமிடல், பொதுத்துறை, வருவாய்த் துறை, மாநகர நல அலுவலர் மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகங்கள், கலந்தாய்வுக் கூடம், 3ம் தளத்தில் தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், வரைவாளர் பிரிவு, மின் கண்காணிப்பாளர்கள், உணவகத்திற்கு அறைகளும், அனைத்துத் தளங்களிலும் குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அரசின் சார்பாக ரூ.30 கோடி ஒதுக்கினார். கூடுதலாக நிதி வேண்டுமென்று நம்முடைய தாம்பரம் மாநகராட்சியிலிருந்து கேட்ட காரணத்தால் இன்றைக்கு ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியுடன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களான வண்டலுர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் இணைப்பதற்கு குழு அமைத்து, அதன்மூலம் பெரிய மாநகராட்சியாக இது உருவாக்கப்படும்,’’ என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ், நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், மண்டலக் குழுத் தலைவர்கள் டி.காமராஜ், வே.கருணாநிதி, ஜெயபிரதீப், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.43.40 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Pallavaram ,Pammal ,Anakaputhur ,Sembakkam Municipalities ,Chitlapakkam ,Madambakkam ,Perungalathur ,Peerkankaranai ,Tiruneermalai ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்