- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- செங்கை
- காஞ்சி
- திருவள்ளூர்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- வங்காள விரிகுடா
- தெற்கு ஆந்திரா
- சென்னை வானிலை மையம்
- புதுச்சேரி
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளின் அப்பால் நிலை கொண்டுள்ளதால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
அது தற்போது மேற்கு திசை நோக்கிநகர்ந்து வருவதால் தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, டெல்டா மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை கொட்டியது. நேற்று காலையிலும் மழை விட்டு விட்டு பெய்தது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 80மிமீ மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பொதுவாக மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
கனமழையை பொருத்தவரையில் இன்று, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் தென் தமிழக மாவட்டங்களில் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 14ம் தேதி வட கடலோர மாவட்டங்கள் தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது.
15ம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரையில் தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகள், சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 256 மிமீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை 259 மிமீ பெய்ய வேண்டும். இது இயல்பைவிட 1 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும். அதன் காரணமாக 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி இதற்கு மேல் வலுப்பெற வாய்ப்பு இல்லை.
அதனால் சென்னைக்கு ஆபத்து இல்லை. வானிலை என்பது தொடர்ந்து மாற்றத்துக்குரியது. வட பகுதிக்கும் தென் பகுதிக்கும் இடையில் காற்று மாறுபாடு வந்ததால் மெதுவாக நகர்ந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அக்டோபர் 15க்கு பிறகு இந்த பகுதியில் மழை இல்லை. கடல் பகுதியில் இருந்து வளிமண்டலத்துக்கான சக்தி குறைவாக இருந்தது. இயல்பாக கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் அதிமாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் குறைவான மழையாக இருந்தது.
அதனால் தற்போது இருக்கும் ஒரே மாதிரியான மழை தான் இருக்கும். இது மெதுவாக நகர்ந்து செல்லும் காற்றழுத்த பகுதியாக இருக்கிறது. அதனால் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மழையில் அளவு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இரவு நேரத்தில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத்துக்கான தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
* தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது.
* அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
* இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
The post காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் மழை தொடரும், வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.