×

காம்பீரை பேச விடாதீங்க! பிசிசிஐக்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்

புதுடெல்லி: ‘இந்திய கிரிக்கெட் அணி தலைமை கோச் கவுதம் காம்பீரை இனி எந்த பிரஸ் மீட்டுக்கும் அனுப்பி நிருபர்களிடம் அவரை பேச விடாதீர்கள்’ என, முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் கூறியுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த நியுசிலாந்து அணியுடனான போட்டிகளில் இந்திய அணி படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி தலைமை கோச் கவுதம் காம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. இதையொட்டி நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கவுதம் காம்பீர் பங்கேற்று நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் சில இக்கட்டான கேள்விகளும் கேட்கப்பட்டன. அதற்கு தனக்கே உரிய பாணியில் காம்பீர் பதில் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, எக்ஸ் சமூக தளத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: காம்பீர் அளித்த பேட்டியை இப்போதுதான் பார்த்தேன். நிருபர்களின் கேள்விகளுக்கு அவரால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. இனிமேல் இத்தகைய பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு காம்பீரை அனுப்பாமல் இருப்பதே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) நல்லது. நிருபர்களிடம் பேசுவதற்கு பதில், இந்திய அணியின் பின்னால் இருந்து அவர் செயல்படட்டும். அவருக்கு பதில் ரோகித் சர்மா, அகர்கர் போன்றோர் பத்திரிகையாளர்களை சந்திப்பது நன்று. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காம்பீரை பேச விடாதீங்க! பிசிசிஐக்கு முன்னாள் வீரர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Gambhir ,BCCI ,New Delhi ,Sanjay Manjrekar ,Gautam Gambhir ,New Zealand ,India ,Dinakaran ,
× RELATED பிசிசிஐ அதிருப்தி காரணமா? நாடு திரும்பினார் தலைமை கோச் கம்பீர்