×

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுப்பு

சன் ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் டீசர், கடந்த மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் இந்த படம் இன்று திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரவிந்தாக்‌ஷன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், எந்த ஆரய்ச்சியும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல், உண்மை சம்பவம் எனக் கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் காட்சியில் முதலில் தோன்றும் பெண், தனது பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன் எனவும், தற்போது பாத்திமா பா என்வும், தான் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி எனவும், ஆப்கன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னைப் போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என்று பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளின் உண்மைத்தன்மையை சரி பார்க்கும்படி, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுடியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர். முறையாக சென்சார் சான்றிதழ் இல்லாமல் இந்த டீசர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிட அனுமதித்தால், இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும், பொது ஒழுங்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், படத்தை பார்க்காமல் எப்படி வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். கடைசி நிமிடத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும். ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் இங்கு வழக்கு தொடர்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sun Shine Cinema Production Company ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்