- தேசிய நெடுஞ்சாலை
- புஷால் காவன்கரை
- புழல்
- சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
- புழல் காவாங்கரை
- சென்னை
- கொல்கத்தா…
- தின மலர்
புழல்: புழல் காவாங்கரையில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை புழல், காவாங்கரை, செங்குன்றம், செல்லும் திசையிலும், செங்குன்றத்திலிருந்து புழல் செல்லும் திசையிலும் தினசரி போக்குவரத்து பல மணி நேரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நின்று ஊர்ந்து ஊர்ந்து செல்கின்ற அவலநிலை உள்ளது.
இதனால், அவசர நேரங்களில் செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் சாலையின் இரண்டு பக்கங்களிலும் சிக்கிக்கொண்டு, கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண நாள் என்பதனால், அதிகளவில் வாகனங்கள் சென்றதால் நெரிசலில் சிக்கி பல நேரம் காத்திருந்து சென்றனர். குறிப்பாக, செங்குன்றம் செல்லும் திசையில் காவாங்கரை பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு, வரும் வாகனங்கள் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்திவிட்டு செல்வதனாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாதவரம் போக்குவரத்து போலீசும், புழல் சட்ட ஒழுங்கு போலீசாரும் உரிய நடவடிக்கை எடுத்து மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அபராத தொகை விதித்து, இங்கு நிரந்தரமாக எந்த வாகனமும் நிறுத்த கூடாது என அறிவிப்பு பலகை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் காவாங்கரை சிக்னலில் உள்ள சிக்னல் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இந்த சிக்கனலில் சுழற்சி முறையில் போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமிக்கவும், சாலையின் இருபக்கங்களிலும் உள்ள சர்வீஸ் சாலைகளில் எந்தவித வாகனங்களையும், குறிப்பாக பைக்குகளை நிறுத்தாமல் இருந்தாலே போக்குவரத்து நெரிசல் இருக்காது.
எனவே, போக்குவரத்து போலீசார் சர்வீஸ் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்குகளையும் கனகரக வாகனங்களையும் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். காவாங்கரை மீன் மார்க்கெட்டில் உள்ளே வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், உள்ளே செல்லும் மீன் வியாபாரிகள் மற்றும் மீன் வாங்கும் பொதுமக்கள், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர்வீஸ் சாலைகளிலே வாகனங்களை குறுக்க நெருக்கமாக நிறுத்திவிட்டு சென்று,
பல மணி நேரம் கழித்து வந்து வாகனத்தை எடுத்துச்செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் காவாங்கரை பகுதியில் அதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாதவரம் போக்குவரத்து போலீசாரும், புழல் சட்ட ஒழுங்கு போலீசாரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
The post புழல் காவாங்கரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.