ஆவடி: அயப்பாக்கம் பகுதியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ரூ.9 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், அங்கிருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, அயப்பாக்கம் – கோலடி பிரதான சாலையில் நீர்ப்பிடிப்பு பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் தொடர் புகார்களையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள 10 கடைகளுக்கு வருவாய் துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று காலை முதல் மாலை வரை திருவள்ளூர் கலெக்டர் உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். அப்போது பாதுகாப்பு பணியில் 43 போலீசார் ஈடுபட்டனர். இதன் மூலம் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ரூ.9 கோடி மதிப்புள்ள 1,5000 சதுர அடி நிலம் மீட்கப்பட்டது. 50 மீட்டர் தூரம் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தில், டாஸ்மாக் பார், ஹார்டுவேர் கடை, பேன்சி ஸ்டோர், மளிகைக் கடை, அடகுக் கடை மற்றும் பைக் வாட்டர் வாஷ் கடைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
The post அயப்பாக்கம் பகுதியில் ரூ.9 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு: கட்டிடங்கள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.