திருத்தணி: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாவட்ட அளவில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கனகம்மாசத்திரம் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் அளித்த விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.ஸ்ரீநாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், அப்சல் அகமது, நேதாஜி, நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை, மாவட்ட தலைவர் துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் பங்கேற்று மாநாட்டு விளக்கவுரையாற்றினார்.
அப்போது, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் அளித்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அதுவரை சாலை அமைக்க ஒத்துழைப்பு தரக்கூடாது. இல்லையெனில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட அளவில் டிசம்பர் 23ம் தேதி திருவள்ளூர் சுங்க சாவடி முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என கூறினார். இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
The post நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக நிலம் அளித்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்காவிட்டால் முற்றுகை போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை appeared first on Dinakaran.