உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சங்க பெயர் பலகையை அகற்றியதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் சலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூர் அடுத்த, பழையசிவரம் மற்றும் உள்ளாவூர் பகுதிகளில் ஆட்டோ தொழிலாளர்கள் நல சங்கம் உள்ளது. இப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் வாலாஜாபாத்தில் இருந்து பழையசிவரம் மலை வழியாக உள்ளாவூர் கேட் வரை ஆட்டோக்களை இயக்குகின்றனர்.
இதனையடுத்து, உள்ளாவூர் பேருந்து நிலையம் அருகே, ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று முன்தினம் புதிய ஆட்டோக்கள் இணைப்பு விழா நடத்தினர். விழாவிற்காக புதியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கத்தின் பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்நிலையில், சங்க பெயர் பலகையினை பழையசிவரம் பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பு ஆட்டோ தொழிலாளர்கள் அகற்றியதாக கூறப்படுகிறது.
தங்களது நல சங்க பலகையை அகற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அகற்றப்பட்ட புதிய சங்க பெயர் பலகையினை மீண்டும் அமைத்திட வலியுறுத்தி உள்ளாவூர் பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த, சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆட்டோ தொழிலாளர்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post சங்க பெயர் பலகையை அகற்றியதை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல்: உத்திரமேரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.