காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்து, தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடுகள் அறிந்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று மாணவர்களுக்கு, அமைச்சர் ஆர்.காந்தி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், பள்ளி கல்வித்துறை சார்பில், எஸ்எஸ்கேவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து, கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
பின்னர், அவர் பேசியதாவது: 2024-25ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை தொடர்ந்து, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்தாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகிறது. மேற்கண்ட அறிவிப்பின்படி 2022-23ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்கள் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக, பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள், கலையரங்க செயல்பாடுகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாநில அளவில் “கலையரசன்’ மற்றும் “கலையரசி” என்ற பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சரால் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். தொடர்ந்து, 2023-24ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில், மாநில அளவில் கலையரசன் மற்றும் கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளார். கடந்த ஆண்டு நடைப்பெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளி அளவில் 45,380 மாணவர்களும், வட்டார அளவில் 11,391 மாணவர்களும், மாவட்ட அளவில் 2,726 மாணவர்களும், மாநில அளவில் 411 மாணவர்களும் பங்குபெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருவி இசை, கோலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, நடனம் ஆகிய போட்டிகளில் மாநில அளவில் முதலிடத்திலும் கோண கொம்பு, கருவி இசை, காற்று கருவி, பிற மாநில நடனம் (தனி), அழகு கையெழுத்து ஆகிய போட்டிகளில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்த ஆண்டு 2024-2025ம் ஆண்டு மாணவர்களிடம் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணரும் நடைமுறையில் உள்ள கலை மரபுகள் பற்றி அவர்களுக்கு கற்பிக்கவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலை வடிவங்களில் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தவும் கலைத்திருவிழா போட்டிகள் “சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்புடன் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
எனவே, மாணவ – மாணவியர்கள் இந்த வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்தி, தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடுகள் குறித்து அறிந்துக்கொண்டு, எதிர்கால வாழ்க்கையில் வெற்றிபெற்று முன்னேற எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post கலை திருவிழா போட்டிகள் தொடக்கம் பாரம்பரிய பண்பாடுகளை அறிந்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்: மாணவர்களுக்கு, அமைச்சர் காந்தி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.