×
Saravana Stores

பணி நிரந்தரம் செய்யக்கோரி 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்

*சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

சித்தூர் : பணி நிரந்தரம் செய்யக்கோரி 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் விட்டல் பேசியதாவது:

ஆந்திர மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் 3654, 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே 104 நாட்களாக கருப்பு பேட் அணிந்து பணிபுரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். இருப்பினும் மாநில அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். எங்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை, சம்பள உயர்வு வழங்கவில்லை. இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவை வழங்கவில்லை.

இது குறித்து நாங்கள் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எங்களுக்கு சாதகமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட பிடித்தல் இருக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் மாநில அரசு எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை.

இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. ஆகவே ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவான அரசாணை 53ஐ அமல்படுத்தி எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வில்லை என்றால் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தற்போது மாநில அரசு 104 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தற்காலிக ஊழியர்களாக பணியில் அமர்த்தி வருகிறது.

மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கி வருகிறது. அதே போல் தனியாருக்கு 104 ஆம்புலன்ஸ் வழங்கியதால் மாதம் ஒரு வாகனத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசே 104 ஆம்புலன்ஸை நடத்தி வந்தால் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post பணி நிரந்தரம் செய்யக்கோரி 104 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Chittoor Collector ,
× RELATED சித்தூர் சோகநாஷினி ஆற்றில் ஆனந்த குளியல் போட்ட வளர்ப்பு பெண் யானை