×

சிறுவாணி அணையில் தீராத சிக்கல் நீர் கசிவு, நிலச்சரிவு சரி செய்யாத அவலம்

கோவை : கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். அணை கட்டி 80 ஆண்டிற்கு மேலாகி விட்டது. அணை 22.6 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் டீ கோப்பை போன்ற தோற்றத்தில் இந்த அணை உருவாக்கப்பட்டது. அணையின் மைய பகுதியில் ஆங்காங்கே மண் திட்டுக்கள் உருவாகியுள்ளது. கடந்த சில ஆண்டாக அணையின் பக்க சுவர்களில் நீர் கசிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீர் கசிவை தடுக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர்.

ஆனால் நீர் கசிவு கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. அணையின் பக்க சுவர்களில் இருந்து வரும் கசிவு அதிகமாகி விரிசல் விடும் அபாயம் இருப்பதாக தெரிகிறது. அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு உரிமை கேரள நீர் பாசனத்துறையிடம் இருக்கிறது. நீர் திறப்பது, நிறுத்தும் அதிகாரமும் கேரள அரசு வைத்துள்ளது. கடந்த 6 ஆண்டில் 15க்கும் மேற்பட்ட முறை அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இல்லாத கேரள அரசு நீர் திறந்து விட்டுள்ளது.

மேலும் அணையில் 1.5 அடி உயரத்திற்கு குறைவாகவே நீர் தேக்கி வைக்க வேண்டும். அணையில் முழு அளவில் நீர் நிரப்பக்கூடாது என உத்தரவிடப்பட்டது. மழை பெய்து அணை நிரம்பும் நிலை இருந்த நேரத்தில் கேரள அரசு நீர் திறந்து விட்டுள்ளதால் கோவை பகுதி மக்கள் தவிப்படைந்துள்ளனர். அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள மண் மேடு மற்றும் நீர் தேக்கும் இடங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சரிவை சீர் செய்ய அந்த இடத்தில் கற்கள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்க பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை மண் சரிவு தடுக்கப்படவில்லை. மேலும் அணைக்கு செல்லும் பாதையில், சாடிவயல் முதல் மாநில எல்லை வனப்பகுதியான செக்போஸ்ட் வரை 9 கிமீ தூரத்திற்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. மரங்கள் வேறுடன் சாய்ந்து கிடக்கிறது. இவற்றை சீரமைக்க கல் தூண் அமைத்து ரோட்டை புதுப்பிக்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அணையின் பக்கச்சுவரில் உள்ள விரிசல் தடுக்க பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவித்தும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

சிறுவாணிக்கான நிதி நிலைமை பரிதாப கதியில் இருப்பதால், இருப்பதை கொண்டு சமாளிக்க வேண்டிய நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் உள்ளனர். அணையில் நீர் எடுக்க, சுத்திகரிக்க, வினியோகம் செய்யக்கூட போதுமான நிதி ஒதுக்கவில்லை. பாதை துண்டிக்கப்பட்டு இருப்பதால் அணைப்பகுதியில் என்ன நடக்கிறது என தெரியாமல், அலுவலகத்தில் உட்கார்ந்து பணி செய்ய வேண்டிய அவலத்தில் குடிநீர் வாரியத்தினர் உள்ளனர்.

கோவை மாவட்டத்தின் முக்கிய நீராதாரம், அடையாளமாக இருந்தும் சிறுவாணி மேம்பாட்டிற்கு போதுமான நிதி ஒதுக்கி பணிகள் நடத்தாமல் இருப்பதால் தொடர்ந்து குடிநீர் முழுமையாக பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் கேரள அரசின் அனுமதியற்ற சில செயல்களை தடுக்க முடியாமல் கோவை குடிநீர் வாரியத்தினர் தவிப்படைந்துள்ளனர். நீர் கசிவு, நிலச்சரிவு பிரச்னைக்கு தீர்வு காண விரைவில் திட்டமிட்டு பணிகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post சிறுவாணி அணையில் தீராத சிக்கல் நீர் கசிவு, நிலச்சரிவு சரி செய்யாத அவலம் appeared first on Dinakaran.

Tags : Siruvani dam ,Coimbatore ,Coimbatore Siruvani Dam ,Western Ghats ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு