×
Saravana Stores

தேவதானப்பட்டியில் முருங்கையில் தேயிலை கொசு தாக்குதல்

* தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

* விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முருங்கையில் தேயிலை கொசு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேவதானப்பட்டி பகுதியில் ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, கோட்டார்பட்டி, ஸ்ரீ ராம்நகர், செங்குளத்துப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, குள்ளப்புரம், சங்கரமூர்த்திபட்டி, வைகைபுதூர், முதலக்கம்பட்டி, வரதராஜ்நகர், ஜெயமங்கலம், மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, வேல்நகர், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி, சில்வார்பட்டி உள்பட 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

நீண்ட கால பணப்பயிர்:இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் முருங்கை சாகுபடி அதிகளவில் செய்யப்பட்டு வந்தது. சில்வார்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அதிகளவு பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. முருங்கை சாகுபடி என்பது ஒரு நீண்டகால பணப்பயிர் ஆகும். முருங்கை நடவு செய்த ஆறுமாதத்தில் குறைவான அறுவடையில் தொடங்கி 18 மாதங்களில் பெரிய மரமாகி தொடர்ந்து ஆண்டிற்கு இரண்டு சீசன்களில் மகசூல் கொடுக்கிறது.

முருங்கை சாகுபடிக்கு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சலும், காற்றில் அதிக வெப்பமும் மணல் சாரியாக வகை மண்ணும் மிகவும் ஏற்றது. இந்த தட்பவெட்ப சூழலில் முருங்கையில் போதிய எதிர்பார்த்த அளவு மகசூலை எடுக்க முடியும். ஒரு ஏக்கர் முருங்கை சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்தல், விதை கர்னை, நடவு, களையெடுப்பு, தொழுஉரமிடுதல், மருந்து தெளித்தல், ரசாயன உரமிடுதல், மரத்திற்கு முட்டுபோடுதல் என ஒரு வருடத்திற்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை செலவாகும். ஒரு வருடம் முடிந்து தொடர்ந்து ஆண்டிற்கு இரண்டு சீசனுக்கு மகசூல் அறுவடைக்கு வரும். முருங்கை காய்க்க தொடங்கிய பின் தசகூலி செலவு ஆண்டிற்கு குறைந்தது ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது.

சென்னைக்கு தினமும் 20 டன் அனுப்பபடும்:

இந்நிலையில் முருங்கையில் உரமிட்டு, களையெடுத்து, மருந்து தெளித்து பூபிடிக்க வைத்த பின்னர், பூ பூத்து பிஞ்சு இறங்கும் தருணத்தில் லேசான மழை மற்றும் கனமழை பெய்தால் ஆறு மாத உழைப்பு, செலவினங்கள் அனைத்தும், பூக்கள் உதிர்ந்து வீணாகி விடும். ஆகையால் பூ பூக்கும் தருணத்தில் மழை இல்லாமல் இருந்தால் அதிக மகசூல் எடுக்கலாம். கடந்த 20 ஆண்டிற்கு முன் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறி கமிஷன் மண்டிக்கு தினந்தோறும் குறைந்தது 20 டன் முருங்கை அனுப்பப்பட்டது. ஒரு சீசனுக்கு குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக முருங்கை அனுப்பப்படும்.

இந்நிலையில் முருங்கை சாகுபடியில் மழை பெய்து பூக்களை உதிர்வித்தல், புழு தாக்குதல், நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக சாகுபடி பரப்பளவு குறைந்து தற்போது சொற்பளவில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தேயிலை கொசு தாக்குதலால் பாதிப்பு:

தற்போது முருங்கையில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேயிலை கொசு முருங்கை சாகுபடியினை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலைக்குள்ளாகி வருகின்றனர். தற்போது தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முருங்கையில் தேயிலை கொசு தாக்கி முருங்கை மரம் முழுவதும் தீயிட்டு கொழுத்திய போல் காட்சியளிக்கிறது.

இதனால் முருங்கை சாகுபடி விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து தேவதானப்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட முருங்கை சாகுபடியினை கணக்கீடு செய்து தேயிலை கொசுவினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து அவற்றை கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவதானப்பட்டியில் முருங்கையில் தேயிலை கொசு தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Moringa ,Devdanapatti ,Horticulture Department ,Devadanapatti ,horticulture ,G. Kallupatti ,Devadhanapatti ,
× RELATED தேவதானப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு