×

திருட்டு, அரிவாள் வெட்டு சம்பவம் எதிரொலி வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

*எஸ்.பி. அதிரடி உத்தரவு

நாகர்கோவில் : வடசேரி பஸ் நிலையத்தில் நடந்த திருட்டு, அரிவாள் வெட்டு சம்பவம் காரணமாக போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் விடிய, விடிய இந்த பஸ் நிலையத்துக்கு பயணிகள் வருகிறார்கள். பஸ் நிலையத்துக்கு அருகில் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. வெளியூர் பயணிகள் பலர் போதையில் பஸ் நிலையத்தில் மட்டையாகி விடுகிறார்கள். இவர்களிடம் உள்ள செல்போன், பணம், வாட்ச், நகைகள் பறிக்கப்படுகின்றன. இதே போல் பஸ்சில் கூட்ட நெரிசலில் முண்டியடித்து ஏறும் பெண்கள், மாணவிகள், வயதானவர்களிடம் பணம், செல்போன், நகைகள் திருடப்பட்டுள்ளன. விபசார புரோக்கர்களின் நடமாட்டமும் பஸ் நிலையத்தை சுற்றி உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வடசேரி பஸ் நிலையத்தில் காண்ட்ராக்டர் ஈஸ்வரன் என்பவர் ஓட, ஓட விரட்டி வெட்டப்பட்டார். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ஐ. தலைமையில் 2 ஏட்டுகள், ஒரு ஆயுதப்படை போலீஸ் வீதம் கண்காணிக்க எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தற்போது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகிறார்கள். நேற்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் காலையில் இருந்தே வெளியூர் செல்ல பயணிகள் அதிகம் பேர் வந்தனர். மாலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை, பெங்களூரு, திருச்சி, மதுரை பஸ்களில் வழக்கத்தை விட அதிகம் பேர் பயணித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் இங்கு எல்லா சமயங்களிலும் போலீசார் இருப்பது இல்லை. வடசேரி பஸ் நிலையம் மிகவும் முக்கியமான பஸ் நிலையமாக இருப்பதால், புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திங்கட்கிழமை திருட்டு தடுக்கப்படுமா?

வாரத்தின் முதல் நாளான திங்கள் அன்று, காலை வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பணியிடங்களுக்கு செல்பவர்கள் அதிகம் பேர் பயணிக்கிறார்கள். என்ட் டூ என்ட் பஸ்களில் தான் முண்டியடித்து ஏறுவார்கள். இதை பயன்படுத்தி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அதிக திருட்டுகள் நடக்கின்றன. எனவே இதை தடுக்க திங்கட்கிழமை காலையில் 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post திருட்டு, அரிவாள் வெட்டு சம்பவம் எதிரொலி வடசேரி பஸ் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Wadasheri bus station ,NAGARGO ,VADASHERI BUS STATION ,Vadaseri Christopher Bus Station ,Nagarko ,Vadaseri ,Bus Station ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் இருந்து திருட்டை தடுத்த நபர்