கீழக்கரை : கீழக்கரை அருகே முள்வாடி கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டால், காய்ச்சல் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாயாகுளம் ஊராட்சி முள்வாடி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த பல மாதங்களாக குவிந்த குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.
மலைபோல் குவிந்த குப்பையில் இரை தேடும் பன்றி, நாய் உள்ளிட்ட கால்நடைகள் நோய்களை உருவாக்கும் பல்வேறு கிருமிகளை பரப்புகின்றன. கிராமச் சாலையின் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் பன்றி, ஆடு, மாடுகளின் கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள், குப்பையால் மக்கள் நடந்து செல்ல இயலாத நிலை உள்ளது. குப்பையில் இருந்து உருவான கொசுக்களால் காய்ச்சலால் பலர் பாதித்துள்ளனர்.
காய்ச்சல் பாதித்த பலர் கீழக்கரை, ராமநாதபுரம் பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் கிருமி தொற்று என தெரிய வந்ததால், காய்ச்சல் பாதித்தோர் அச்சமடைந்து உள்ளனர். இதுகுறித்து திருப்புல்லாணி ஒன்றிய ஊராட்சி துணைத் தலைவர் சிவலிங்கம் கூறுகையில், முள்வாடி கிராமத்தில் கடந்த பல மாதங்களாக குவிந்துள்ள குப்பையை மாயாகுளம் ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மாதக் கணக்கில் தேங்கி கிடக்கும் குப்பையில் துர்நாற்றம் எடுத்துள்ளது. சுகாதார சீர்கேட்டால் காய்ச்சலால் பலர் பாதித்துள்ளனர். முள்வாடி கிராம மக்களின் நலன் கருதி மாவட்ட சுகாதார துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post கீழக்கரை அருகே நோய் பரப்பும் குப்பை கழிவுகள் appeared first on Dinakaran.