×
Saravana Stores

குழந்தைகள் கல்விச் செலவை அரசே ஏற்கும் அறிவிப்பு முதல்வருக்கு 5 லட்சம் தொழிலாளர்கள் நன்றி

* கோரிக்கை விடுத்து 24 மணி நேரத்தில் நிறைவேறியதால் பெண் பட்டாசு தொழிலாளி உருக்கம்

சிவகாசி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாள் கள ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை சந்தித்து, பட்டாசு உற்பத்தி குறித்தும் குடும்ப வருமானம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது பெண் தொழிலாளி இசக்கியம்மாள், ‘‘பட்டாசு விபத்தில் எங்களுக்கு ஏதாவது நடந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றது.

எங்களது குழந்தைகள் படிப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு, ‘‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நம்பிக்கையுடன் இருங்கள்’’ என முதல்வர் உறுதியளித்தார். பெண் தொழிலாளி கோரிக்கையை கூறி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு 5 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர். பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறுகையில், ‘‘10 ஆண்டுகளாக பட்டாசு ஆலை வேலைக்கு செல்கின்றேன். தமிழக முதல்வரை நேரில் பார்த்தது மகிழ்சியாக இருந்தது. விபத்தின்போது எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் எங்களது பிள்ளைகள் கஷ்டப்படுகின்றனர் என முதல்வரிடம் கூறினேன்.

பட்டாசு தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு எங்களது கோரிக்கையை ஏற்று, தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என தமிழக முதல்வர் அறிவித்தது மகிழ்சியாக உள்ளது. எனது கோரிக்கையை முதல்வர் அறிவிக்கும்போது சிவகாசியில் இருந்தேன். முதல்வர் உடனடியாக அறிவித்தது இன்ப அதிர்சியாக இருந்தது. 5 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்’’ என்றார்.

* ‘நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு’
தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி சங்கத்தின் உற்பத்தியாளர் (டான்பாமா) தலைவர் சோனி கணேசன் கூறும்போது, ‘‘முதல்வர் அறிவிப்பு மூலம் விபத்தில் உயிரிழக்கும் பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. விபத்தினால் பாதிக்கக்கூடிய மக்களுக்கு அவர்களுக்கான தொடர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அவர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இதுகுறித்து கலெக்டரிடமும் கோரிக்கை வைத்திருந்தோம். இந்த கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்வோம் என்று கலெக்டர் எங்களிடம் தெரிவித்திருந்தார். வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு டான்பாமா சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்’’ என்றார்.

* ‘எனது வாழ்நாளில் மறக்க முடியாத நாள்’
பட்டாசு தொழிலாளி திருமுருகன் கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னிடம் வந்து எந்த ஊரில் இருந்து வருகின்றீர்கள் என கேட்டார். நான் அதற்கு, ராமலிங்கபுரத்திலிருந்து தினமும் வந்து செல்கின்றேன் என்று கூறினேன். வீட்டில் உள்ளவர்கள் குறித்து நலம் விசாரித்தார். வேலையின் போது பாதுகாப்பாக இருக்கின்றீர்களா என கேட்டார்.

மிகுந்த பாதுகாப்புடன் வேலை செய்கின்றோம் என்று அவரிடம் கூறினேன். போதிய சம்பளம் கிடைக்கின்றதா, உங்களுக்கு வேற என்ன வசதி வேண்டும் என்று கேட்டார். உங்கள் ஆட்சியில் எல்லாமே நல்லபடியாக நடக்கின்றது என கூறினேன். முதல்வர் திடீரென்று என்னிடம் வந்து நலம் விசாரித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் இந்த நாளை மறக்க முடியாது’’ என்றார்.

The post குழந்தைகள் கல்விச் செலவை அரசே ஏற்கும் அறிவிப்பு முதல்வருக்கு 5 லட்சம் தொழிலாளர்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Urukam Sivakasi ,Tamil Nadu ,M. K. Stalin ,Virudhunagar district ,Kanincherry Pudur ,Virudhunagar ,
× RELATED நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்டு...