×

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

* பதவி சுகத்துக்காக கரப்பான்பூச்சி போல ஊர்ந்து செல்லும் உங்கள் பெயரையா வைப்பது எனவும் காட்டமாக கேள்வி

விருதுநகர்: அரசு திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பதவி சுகத்துக்காக கரப்பான்பூச்சி போல ஊர்ந்து செல்லும் உங்கள் பெயரையா வைப்பது என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். விருதுநகரில் ரூ.77.12 கோடியில் 6 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பட்டம்புதூரில் நடந்த விழாவில் 57,536 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆட்சி பொறுப்பில் இருந்த போது மக்கள் நலனை பற்றி கவலைப்படாத எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மக்கள் நலத்திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு பணத்தை கோடிக்கணக்கில் ஒதுக்குவதாக உளறியிருக்கிறார். ஒருத்தர் பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில் சொல்லக்கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அதை இனி மாற்றி, பழனிசாமி அளவிற்கு சொல்லக்கூடாது என சொல்ல வேண்டும்.

அந்த அளவிற்கு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகிறார். நமது ஆட்சியில் நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கலைஞர் பெயரில் மக்கள் நலனுக்கு செய்து வரும் மூலதன செலவுகள் என்னென்ன என எளிய மக்களுக்கான திட்டங்கள் பற்றி மணிக்கணக்கில் சொல்ல முடியும். எதை மக்களுக்கு பயன்படாத திட்டங்கள் எனச் சொல்கிறார்? தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கு, தென்தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர்களுக்கும் அறிவுச்சுரங்கமான மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காக்கும் கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை…

இவற்றை பயனில்லாத திட்டம் எனச் சொல்கிறாரா? தமிழ்நாட்டில் இருக்கும் 1.20 கோடி தாய்மார்கள் பயன்பெறும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறும் கலைஞர் உரிமைத்திட்டம். அதை பயனில்லாதது எனச் சொல்கிறாரா? எதை சொல்கிறீர்கள் பழனிசாமி? வாய்த்துடுக்காக பேசி, பேசித்தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறீர்கள். உங்கள் ஆணவத்தை தமிழ்நாட்டு மக்கள் இனி தொடர்ந்து தோற்கடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாட்டை காக்க 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞர் பெயரை வைக்காமல் யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி மாதிரி தரையில் ஊர்ந்து போன உங்கள் பெயரையா வைக்க முடியும்? கலைஞர் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பொறிக்கப்பட்ட பெயர். தமிழ்நாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத அடையாளம். கலைஞர் தான் தமிழ்நாட்டை எந்நாளும் காக்கக் கூடிய காவல் அரண்.

அவரின் கொள்கைகள், சிந்தனைகளை செயல்படுத்தி வருகிறேன். விடியல் பயணம், புதுமைப் பெண், காலை உணவுத்திட்டம் எல்லாம் கலைஞர் பெயரை சொல்கிறது. கலைஞரின் பிள்ளையாக மட்டுமல்ல, தொண்டனாக பெருமையாக செல்வேன். கலைஞர் புகழ் வெளிச்சம் இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. அந்த வெளிச்சம் பழனிசாமி கண்களை கூச வைக்கிறது. என்றும் மக்களான உங்களுக்கு உறுதுணையாக, உங்கள் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் சேவகனாக எனது பணிகள் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

The post நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு? எடப்பாடி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Edappadi ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலாக...