ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள முகாசிப்பிடாரியூர் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்த மூர்த்தி (35), இவரது மனைவி கோமதி (30) ஆகியோர் பெருந்துறை பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். நேற்று காலை 8.30 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றனர். மூர்த்தியின் தாய் பழனியம்மாள் (65), வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், மதியம் 12 மணியளவில் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வந்துவிட்டு பின்பு மீண்டும் தோட்டத்துக்கு சென்று விட்டார். பின்னர், பழனியம்மாள் 1.30 மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தனது மகன் மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார்.
மூர்த்தியும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த 2 பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க செயின் 4, வளையல் 2, பிரேஸ்லெட் 1, என மொத்தம் 17 பவுன் நகை மற்றும் வெள்ளி டம்ளர், வெள்ளி கிண்ணம், வெள்ளி கொலுசு, அரைஞாண் கயிறு என ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டின் கதவை உடைத்து 10 லட்சம் நகை கொள்ளை appeared first on Dinakaran.