×

திருத்தணி பகுதியில் ஏரியில் மணல் திருடி டிராக்டரில் கடத்தியவர் கைது: 2 டிராக்டர்கள் பறிமுதல்

திருத்தணி: திருத்தணி பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் ஆறு, ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் இருந்து மணலை கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் திருத்தணி உள்பட பல்வேறு காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தணி அருகே விகேஆர்.புரம் பகுதியில் நேற்றிரவு திருத்தணி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுகுமி ஏரியிலிருந்து மணலை கடத்தி கொண்டு, கே.ஜி.கண்டிகை நோக்கி சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஏரி மணலை கடத்தி வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் விகேஆர்.புரம் ஊராட்சி, பொந்தல கண்டிகை கிராமத்தை சேர்ந்த எத்திராஜ் (51) என தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதேபோல் குப்பம் கண்டிகை, எல்.வி.புரம் பகுதிகளில் நேற்றிரவு திருவாலங்காடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உரையூர் சாலை மார்க்கமாக பாகசாலை நோக்கி ஆற்று மணலை கடத்தி சென்ற டிராக்டரை போலீசார் நிறுத்த முயற்சித்தனர். போலீசாரை பார்த்ததும், டிராக்டரை ஓட்டி வந்தவர் சற்று தொலைவில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருத்தணி மற்றும் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post திருத்தணி பகுதியில் ஏரியில் மணல் திருடி டிராக்டரில் கடத்தியவர் கைது: 2 டிராக்டர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hijacker ,Trithani ,Thiruthani ,Tiruptani ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் அமித் ஷாவை கண்டித்து விசிகவினர் ரயில் மறியல்!!