×

பச்சை வண்ணம் கொண்ட பரிமளரங்கன்

8.11.2024 திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் ஐப்பசி உற்சவம் ஆரம்பம்

திருஇந்தளூர் மயிலாடுதுறையில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இங்கு பரிமளநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் பரிமளரங்கநாதர். இவருக்கு இன்னொரு பெயர் மருவினிய மைந்தன். உற்சவர் சுகந்தநாதன் தாயார் விமோசனவல்லி.தீந்தமிழ்ப் பாடல்களால் இறைவனை வாழ்த்தி ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த்திருநாட்டில் கங்கையிற் புனிதமாகிய காவிரிக் கரையிலமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. அவை மைசூரில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள அப்பாலரங்கம், கும்பகோணத்தில் உள்ள மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என்பனவாகும்.

திருஇந்தளூர் 108-தேசங்களில் 26-வது தலமாகும். இத்தலத்தைச் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் என்ற பெயரும் உண்டு.கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்த வரலாறு இங்கு தான் நடந்திருக்கிறது. பகவான் தலைப் பக்கம் காவிரித்தாயும் கால் பக்கம் கங்கையும் அமர்ந்திருக்கின்ற காட்சி மிகவும் அற்புதமானது. வேறெங்கும் காணமுடியாதது. ஐப்பசி மாதம் முழுவதும் இந்தக் கோயிலில் விழாக்கோலம்தான். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலுமிருந்தும் பக்தர்கள் வந்து குவிவார்கள். இங்கு காவிரி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் ‘கடைமுக ஸ்நானம்’ நடைபெறும். இதுமிகவும் புனிதமான ஸ்நானம் என்பதால் இந்த ஸ்தலம் வரலாற்றுச் சிறப்புடையது.

பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்துடன் காட்சி தருகிறார்.பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப்போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்ட, பெருமாள் அந்த வேதங்களை அரக்கர் களிடமிருந்து மீட்டு, வேதங்களுக்குப் பரி மளத்தைக் கொடுத்தமையால் இறைவன் பரிமள ரங்கநாதன் என்று அழைக்கப்பெறுகிறார். இத்தலத்தைச் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம் வீசப் பெற்ற பெருமாள் சுகந்தவன பெருமாள் என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஒரு சமயம் திருமங்கை மன்னன் பெருமாளை தரிசிக்கவந்தான். அப்போது சந்நதிக் கதவுகள் திறக்கப்படவில்லை’ பெருமாளும் அவருக்கு காட்சியளிக்கவில்லை. ஆழ்வார் எவ்வளவு வேண்டியும் வருத்தமும் கொண்டு ‘அடியார்களுக்காகத்தானே நீர் இங்கே கோயில் திறக்காமலிருப்பது ஏன்? நீரே நும் அழகைக் கண்டு வாழ்ந்தேபோம்’ என்று நிந்தா ஸ்துதியாக பாடினார் இப்படி –

‘‘ஆசை வழுவா தேத்து
மெமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே
யாளாய்த் திரிகின் றோமுக்கு
காசி னொளியில் திகழும்
வண்ணம் காட்டீர், எம்பெருமாள்
வாசி வல்லீர் இந்த ளுரீர்!
வாழ்ந்தே போம் நீரே!’’
இதன் பின்னர் அடியார்க்குப் பெருமாள் காட்சி கொடுத்தார்.

திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த 9-ம் திருமொழியில் திருஇந்தளூர் பாசுரங்கள்பத்தில் காணலாம்.‘‘பச்சை மாமலை போல் மேனி பவள வாய்க்கமலச்செங்கண் அச்சுதா அமரரே!’’
என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் பாடியது இந்தப் பெருமாளைத் தான். அவருக்கு பச்சைத் திருமேனியுடன் காட்சியளித்தார், என்பது வரலாறு.இறைவன் திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர். கண்களையும் கருத்தையும் கவருவதாக அமைந்துள்ளது. இறைவனது திருமேனி அழகை ‘மறைந்திருந்த தலைக்காப்பு நீக்கப் பெற்ற இன்ன வண்ணமென்று காட்டீர் இந்தளூரிரே’ என்ற திருமங்கை மன்னன் அன்று பாடிய பாசுரத்துக்கு இன்று தன் திருமேனி அழகை எல்லோரும் கண்டு வணங்கி வாயிலானால் பாடி மனத்தினால் சிந்திக்க போயப்பிழையும் நின்றனவும் தீயினில் தூசாக அருள்பாலிக்கிறார்.

மூலஸ்தான மூர்த்தி பரிமளரங்கநாதரின் முகாத விந்தத்தில் சூரியனாலும், பாதார விந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். சந்திரன் செய்த தவறுக்கு மற்ற திருத்தலங்களில் பாவவிமோசனம் கிடைத்தாலும் சந்திரன் திருப்தியடையவில்லை. இம்மியளவுகூட தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது என்பதால் சந்திரன் கண்ணும் கருத்துமாகக்கொண்டு, பெருமாளிடம் தன் குறையைச் சொல்வதை விட தாயாரிடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை அவர் மீதிருந்த பாவத்தை அப்படியே போக்கியதாகச் சொல்கிறார்கள். இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு ‘சந்திரபாப விமோசன வல்லி’ என்ற பெயர் உண்டு. மேலும் ஸ்ரீபரிமளரங்க நாயகி, சுகந்தவன நாயகி, புண்டரீகவல்லி என்ற பெயர்களும் உண்டு. தாயாருக்குத்
தனிசந்நதி உண்டு.

பிராகாரத்தின் ஒரு பக்கம் உற்சவ கண்ணன் அழகிய திருக்கோலத்தில் காட்சி தருகிறான். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் சந்தான கோபாலனை தம் மடியில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டால் புத்திரப் பேறு அடைவர் என்பது ஐதீகம்.

மற்றொரு பக்கம் சக்கரத்தாழ்வாருக்கும் ஆஞ்சநேயருக்கும் தனித்தனி சந்நதி உண்டு. இமயனும் அம்பரிஷனும் எம்பெருமாள் திருவடிகளை அர்ச்சிக்கின்றார்கள்.மூலஸ்தான விமானம் வேதாமோத விமானம். அம்பரீஷ மகாராஜா என்ற மன்னன். இத்தலத் திருக்கோயிலைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். புகழ் பெற்ற திருக்குளம் இந்து புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.

உற்சவப் பெருமாள் உபய நாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இங்கு ஆஞ்சநேயர் தனித்துவம் பெற்று விளங்குகிறார். மிகுந்த வரப் பிரசாதி. சந்நதி வெளியில் கீழ வீதியில், தனது பக்தர்களுக்கு வேண்டுவனவற்றைத் வேண்டியபடி அளிக்க வல்ல வள்ளல் கடல் கடந்து சீதாபிராட்டியாரைக் கண்டு ராமனது துயர் நீக்கிய மகாவீரனான இவரை அண்டினோரின் துயர் தீர அருள்புரிகிறார். இவருக்கு திருமஞ்சனம் தினந்தோறும் நடைபெறுகிறது.

இத்திருத்தலத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் இங்கே விழாக்கோலம் பூண்டு இருக்கும். இங்கே காவேரியும் சமுத்திரமும் சங்கமமாகும் இடத்தில் துலாஸ்நானம், கடைமுகஸ்நானம், முடவன் முழுக்கு ஸ்நானம் செய்வது’ மிகவும் விசேஷம் பாரத மெங்கிலுமிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து துலாஸ்நானம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருமங்கை ஆழ்வார் திருஇந்தளூர்
பெருமாளை நோக்கி,
‘‘நும்மைத் தொழுதோம் நுந்தம்
பணிசெய் திருக்கும் நும்மபடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோர்
மெந்தாய் இந்தளூரிலே!
எம்மைக் கடிதாக் கரும
மருளி ஆவா வென்றிரங்கி
நம்மை யொருகால் காட்டி
நடந்தால் நாங்க ளுய்யோமே?’’

என்று பாடி, ‘‘திருவிந்தளூர்ப் பெருமானே’ அடியார்களைக் காப்பாற்று’’ என்று வேண்டுகிறார்!’’

ஆர். சந்திரிகா

 

The post பச்சை வண்ணம் கொண்ட பரிமளரங்கன் appeared first on Dinakaran.

Tags : Thiruindalur ,Parimalaranganathar ,Aippasi Utsavam Commencement ,Mayiladuthurai ,river Kaveri ,Parimalanathar ,Maruviniya Mainthan ,Utsawar Sukandanathan ,Vimosanavalli.Dinthamil ,
× RELATED சந்திரனின் சாபத்தை தீர்த்த பரிமள ரங்கநாதர்