×
Saravana Stores

சேர்க்கையிலும், பள்ளி மேம்பாட்டிலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு மாதிரி பள்ளி

சமயபுரம், நவ.8: மண்ணச்சநல்லூரில் மாணவர் சேர்க்கையிலும், பள்ளி மேம்பாட்டிலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு மாதிரி பள்ளி தரம் உயர்த்தட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 35 கிராமங்களில் இருந்து 3600 க்கும் மேற்பட்ட மாணவிகள் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இரண்டாவது இடமாக மாணவிகள் அதிக அளவில் படிப்பது மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தான். இப்பள்ளி 1964 வருடம் மண்ணச்சநல்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவிகள் படிப்பதற்காக அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியாக தோன்றியது. அதன்பின் 1989ம் ஆண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து மாணவிகளின் சேர்க்கை அதிகரித்தது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளின் மதிப்பெண்களும் அதிகரித்தால் 2018ஆம் ஆண்டில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக உருவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்பள்ளியில் சுமார் 3,600 மாணவிகள் மற்றும் 132 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் தற்போது இந்த பள்ளிக்கு எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டதால் குழந்தைகள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பு நலன் கருதி சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். பள்ளியில் உள்ள 95 அறைகளுக்கும், பள்ளி வளாகங்கள் முழுவதும் என மொத்தம் 114 சிசிடிவி கேமராக்களை பெற்றோர்கள் தங்களது சொந்த செலவில் ₹7 லட்சத்தில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் குழுவினர் கூறுகையில், அரசு பள்ளிகளில் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளிலும், குறிப்பாக பெண்கள் பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல்முறையாக வகுப்பறை முழுவதும் அரசுப் பள்ளியில் கேமராக்கள் பொருத்தியுள்ளது இதுதான் முதல் முறையாகும். இதனை அரசு அலுவலர்களின் ஒப்புதலுடன் பொருத்தியுள்ளோம். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு நலனைக் காக்கும் வகையில் இந்த சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளி என்பதால், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. பெற்றோர் உட்பட பள்ளிக்கு வந்து செல்லும் அனைத்து நபர்களும், இதன் வாயிலாக கண்காணிக்கப்படுவர் என்றனர்.

The post சேர்க்கையிலும், பள்ளி மேம்பாட்டிலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு மாதிரி பள்ளி appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Mannachanallur ,Trichy ,Dinakaran ,
× RELATED தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை