தென்காசி,நவ.8: ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிய 2 பேரை தென்காசி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது அந்தரங்க வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதாகவும், அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி இதை பரப்பிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் பொறுப்பு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் எஸ்பி ரமேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பகபிரியா,
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்த ஐந்தாங்கட்டளை நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த அண்ணாமலை மகன் ஜெயராஜ் (33) மற்றும் வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பிய ஆலங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த பவுல் அருணாச்சலம் மகன் சக்தி அருள் (28) ஆகிய இரண்டு பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தல், அதற்கு துணை போகுதல் மற்றும் அவற்றை வாட்ஸ் அப் போன்ற பிற இணையதளங்களில் பகிர்தல் போன்ற எந்த செயலில் ஈடுபட்டாலும் அவை அனைத்தும் குற்றமாகும். இச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
The post ஆலங்குளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பிய இருவர் கைது appeared first on Dinakaran.