×

உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாஜக; பஞ்சாப்பில் பெரும்பான்மையை நெருங்கும் ஆம்ஆத்மி?… தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என்றும், பஞ்சாப்பில் பெரும்பான்மை பலத்தை ஆம்ஆத்மி கட்சி நெருங்கும் என்றும் தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சி தற்போது பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வரும் மாதங்களில் நடைபெறும் பேரவை தேர்தல்களில் களம்காண உள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பில் நடந்த பேரவை, மக்களவை தேர்தல்களில் களம்கண்ட ஆம் ஆத்மி கட்சி, வரும் தேர்தலில் பஞ்சாப்பில் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டைம்ஸ் நவ் பாரத் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்துக்கு சற்று குறைவான இடங்களை பிடிக்கும் என்றும், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளின்படி பார்த்தால், 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி 53 முதல் 57 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸ் கட்சி 41 முதல் 45 இடங்களையும், அகாலி தளம் கூட்டணி 14 முதல் 17 இடங்களையும், பாஜக – கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் கூட்டணி ஒரு சில இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 42 முதல் 48 இடங்களை மீண்டும் பாஜக கைப்பற்றும்; காங்கிரஸ் 12 முதல் 16 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி நான்கு முதல் ஏழு இடங்களையும் கைப்பற்றி சட்டமன்றத்தில் நுழையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவாவை பொருத்தமட்டில், 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 22 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் கிடைக்கும். கடந்த 2017ம் ஆண்டில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிப் பெற்ற காங்கிரஸ், இந்த தேர்தலில் நான்கு முதல் ஆறு இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, கோவாவில் நேரடியாக வந்து பிரசாரம் செய்தால் கூட, அக்கட்சி இரண்டு சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கருத்துக்கணிப்புகளின்படி பார்த்தால் பஞ்சாப்பில் இழுபறியும், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

The post உத்தரகாண்ட், கோவாவில் மீண்டும் பாஜக; பஞ்சாப்பில் பெரும்பான்மையை நெருங்கும் ஆம்ஆத்மி?… தனியார் செய்தி நிறுவன கருத்துக் கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Utterkhand ,Goa ,Bajaka ,Aadma ,Punjab ,New Delhi ,Utharkhand ,Aamadmi Party ,Utgarkhand ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...