×
Saravana Stores

திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: கடற்கரையில் லட்சக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகரமாக கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர முழங்க சூரனை, ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஸ்தல புராணத்தை உணர்த்தும் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 2ம் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் யாகசாலை பூஜைகள், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளல், தங்கச் சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் காட்சி, தீபாராதனை நடந்து வந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு கால சந்தி பூஜை நடைபெற்றது. சஷ்டியை முன்னிட்டு மூலவருக்கு வைர கிரீடமும், தங்க அங்கியும் அணிவிக்கப்பட்டது. விரதமிருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் மற்றும் காவடி எடுத்து வந்தும் தரிசித்தனர்.

காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்களுடன் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனை, உச்சிக்கால தீபாராதனையும், யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி சுவாமி, அம்மனுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தடைந்தார். அங்கு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி திருக்கோயிலில் வேல்பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர், மாலை 4.20 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் புறப்பட்டார். முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதி தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முதலில் கடற்கரையில் மாலை 4.54 மணிக்கு கஜமுக சூரனை சம்ஹாரம் செய்தார். 2வதாக மாலை 5.10 மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்க முகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை 3 முறை சுற்றி வந்து போர் புரிந்தான்.

முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார். 3வதாக மாலை 5.22 மணிக்கு தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்த சூரபத்மனை. முருகப்பெருமான் வதம் செய்தார். அதன் பிறகும் ஆணவம் அடங்காமல் மாலை 5.34 மணிக்கு மாமரமாக உருவெடுத்த சூரபத்மனை அழகே உருவான முருகப்பெருமான் ஆட்கொண்டு சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்தார். அந்த சேவலையே தனது கொடியாகவும், மயிலையே தனது வாகனமாகவும் மாற்றினார்.

ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும்போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியது விண்ணை முட்டியது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (6ம் தேதி) நள்ளிரவு முதலே திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.

அதிகாலை 1 மணிக்கு நடை திறந்தது முதல் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் பல்வேறு வழித்தடங்களில் 150க்கும் மேற்பட்ட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.

விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, எம்.எல்.ஏ. சண்முகையா, திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103வது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, தனபால், செந்தில்குமார், ராமமூர்த்தி, வேல்முருகன், விக்டோரியா கெளரி, தூத்துக்குடி மாவட்ட நீதிபதிகள் தாண்டவன், வஷித்குமார், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) சுகுமாறன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* பழநியில் சூரர்களை சின்னக்குமாரர் வதம் செய்தார்
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு மற்றும் நவவீரர்கள் சமரசம் பேசும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் வதம் செய்தார்.

இதனைத்தொடர்ந்து ஆரிய மண்டபத்தில் வெற்றி விழா நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மலைக்கோயிலில் தனுர் லக்னத்தில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 8.20 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.

* இன்று திருக்கல்யாணம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (8ம் தேதி) திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரத வீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தை சேர்கிறார். மாலையில் சுவாமி தனிச்சப்பரத்தில் புறப்பட்டு வந்து, தெற்கு ரத வீதி- மேல ரத வீதி சந்திப்பில் சுவாமி- அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

The post திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: கடற்கரையில் லட்சக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur ,Jayantinatha ,Arokara ,Gandashashti festival ,Tiruchendur Subramania Swamy Temple ,Jayantinatha Samharam ,Lord Muruga ,Arupada ,Jayanthanath ,Samharam ,
× RELATED திருச்செந்தூர் கோயிலுக்கு வரும்...