×

டி20 கிரிக்கெட் தொடர்; இந்தியா-தெ.ஆ பலப்பரீட்சை : இன்று முதல் ஆட்டம்

சென்னை: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டி20 அணி, 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்று டர்பனில் நடக்கிறது. தொடர்ந்து 2, 3 மற்றும் 4வது ஆட்டங்கள் முறையே நவ.10, 13, 15 தேதிகளில் நடக்க உள்ளன. சமீபத்தில் நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் ஆடிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்து, ஒயிட் வாஷ் ஆன பிறகு இந்தியா விளையாட உள்ள முதல் சர்வதேச தொடர் இது. இது முற்றிலும் வேறு அணி என்றாலும், டெஸ்ட் தொடரில் பெற்ற படுதோல்வியால் துவண்டு கிடக்கும் இந்திய ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க, இந்த டி20 தொடரை வெல்வது அவசியம்.

அதை இலக்காக கொண்டு விளையாட உள்ள சூரியகுமார் தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக், அக்சர், சாம்சன் போன்ற அனுபவ வீரர்களுடன் வருண், ஜிதேஷ், அர்ஷ்தீப், அபிஷேக் உள்ளிட்ட துடிப்பான புதுமுக வீரர்களும் உள்ளனர். அதே போல் அய்டன் தலைமையிலான தெ.ஆ அணியில் அனுபவமுள்ள வீரர்களும், அறிமுக வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு சாதகமான அம்சம். ஆனால் டி20 ஆட்டங்களை பொறுத்தவரை, தென் ஆப்ரிக்காவில் அதிகம் வென்ற அணியாக இந்தியா நீடித்து வருவது வரலாறு. இம்மாதம், ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தங்கள் இருப்பைக் காட்ட துடிப்புடன் விளையாடுவர்கள். அதனால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது.

இந்தியா: சூரியகுமார்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), திலக் வர்மா, ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரமன்தீப், அக்சர், ரவி பிஷ்னாய், விசாக், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப், யாஷ் தயாள், ஆவேஷ் கான்.

தென் ஆப்ரிக்கா: அய்டன் மார்க்ரம்(கேப்டன்), ஃபெர்ரெய்ரா, கிளாஸ்ஸன், ரியான், டிரிஸ்டன்(விக்கெட் கீப்பர்கள்), ஒட்நீல், ஜெரால்டு கோட்சீ, கேசவ் மகராஜ், மிஹ்லலி, பீட்டர், அண்டில் சிமேலன்

நேருக்கு நேர்
* இந்த 2 அணிகளும் இதுவரை, 27 டி20 ஆட்டங்களில் களம் கண்டுள்ளன. அவற்றில் இந்தியா 15, தெ.ஆ11 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது.
* இந்த 2 அணிகளும் கடைசியாக விளையாடிய 5ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று சமநிலையில் உள்ளன. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
* இரு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை, 9 தொடர்கள் நடைபெற்று இருக்கின்றன. அவற்றில், இந்தியா 4 தொடர்களையும், தெ.ஆ 2 தொடர்களையும் வென்று உள்ளன. எஞ்சிய 2 தொடர்கள் சமனில் முடிந்தன.
* தெ.ஆ. வில் இதுவரை நடந்த 5 தொடர்களில், 4 தொடர்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, 2016க்கு பிறகு, தெ.ஆ. விடம் ஒரு தொடரில் கூட இந்தியா தோல்வியை சந்தித்ததில்லை.

The post டி20 கிரிக்கெட் தொடர்; இந்தியா-தெ.ஆ பலப்பரீட்சை : இன்று முதல் ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : T20 cricket series ,India ,South Africa ,Chennai ,Indian T20 ,Durban ,South ,Africa ,Dinakaran ,
× RELATED முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: ரகானே அதிரடி: பைனலில் மும்பை