×

முழு கொள்ளளவை எட்டும் ஊட்டி காமராஜ் சாகர் அணை: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: மின் உற்பத்திக்காக பயன்படும் ஊட்டி காமராஜ் சாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு பகுதிகளிலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை கொண்டு நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை 2 மாதங்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்தது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில், மின் உற்பத்திக்காக பயன்படும் 25 அடி உயரம் கொண்ட காமராஜ் சாகர் அணையில் தற்போது 23 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இந்த அணை ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ளதால், கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அணையை கண்டு ரசித்துச் செல்வது வழக்கம். இம்முறை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் பைன் பாரஸ்ட், காமராஜ் சாகர் அணை போன்ற பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசிப்பதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இந்த தண்ணீரை கொண்டு கோடை காலம் வரை சிங்கரா மற்றும் மாயார் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்ய முடியும்.

The post முழு கொள்ளளவை எட்டும் ஊட்டி காமராஜ் சாகர் அணை: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kamaraj Sagar Dam ,Kamraj Sagar Dam ,Neelgiri district ,Ooty Kamraj ,Sagar Dam ,
× RELATED அகலம் குறைத்து அமைக்கப்பட்டதால்...