×

திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: குவியும் பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (7ம் தேதி) நடைபெறுகிறது. இதனை காண்பதற்காக பக்தர்கள் குவியத் துவங்கியுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 4ம் நாளான நேற்று மதியம் மூலவருக்கு உச்சிக்கால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றது. யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் திரளானோர் தரிசித்தனர்.

தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை (7ம் தேதி) மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கோயிலுக்கு வந்து பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கடற்கரை மற்றும் திருக்கோயில் வளாகத்தில் காவல் துறையினர் உயர்கோபுரங்கள் மற்றும் கேமராக்கள் உதவியுடன் கண்காணித்து வருகின்றனர். கடற்படையினரும் கடலோரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 

The post திருச்செந்தூர் கோயிலில் நாளை சூரசம்ஹாரம்: குவியும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Surasamharam ,Tiruchendur temple ,Tiruchendur ,Tiruchendur Subramania Swamy Temple Gandashashti Festival ,Gandashashti festival ,Tiruchendur Subramania Swamy Temple ,Yagasala Pujas ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் 7...