×
Saravana Stores

தீபாவளி சீட்டு நடத்தி ₹1 கோடி மோசடி

*எஸ்பியிடம் புகார் மனு

தர்மபுரி : தர்மபுரியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் நேற்று எஸ்பியிடம் புகார் மனு கொடுத்தனர்.தர்மபுரி கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட எஸ்பி மகேஸ்வரனிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: தர்மபுரி கோட்டை பகுதியில், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், கடந்த 2020ம் ஆண்டு முதல் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். மாதத்தவணையில் பணம் பெற்றுக்கொண்டு, பல்வேறு சீட்டுகளை நடத்தி வந்தனர்.

சீட்டில் சேருபவர்களுக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம், வீட்டுமனை, வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை பொருட்கள், பாத்திரங்கள், பட்டாசு, இனிப்பு மற்றும் காரம் வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தனர். மேலும், அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு தங்க நாணயம், ஸ்கூட்டி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை நம்பி கடந்த 2 வருடங்களாக, பல்வேறு வகையான சீட்டுகளில், எங்கள் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் சேர்ந்து மாதத்தவணையை முறையாக செலுத்தி வந்தோம்.

தங்கம் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி, கடந்த 2 வருடங்களாக எங்களுக்கு எந்த பரிசுப் பொருட்களையும் தராமல் ஏமாற்றி வருகின்றனர். நாங்கள் கட்டிய பணத்தையாவது தாருங்கள் என்று கேட்ட போது, அதற்கும் காலம் தாழ்த்தி வந்தனர். தீபாவளிக்கு மறுநாள் கடந்த 1ம்தேதி பரிசு பொருளோ அல்லது பணமோ கொடுக்கிறேன் என்று அவர்கள் கூறினர். அதன்படி, அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கேட்டபோது, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர்.

எங்கள் பகுதியில் மட்டும், தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்த அந்த குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு, நாங்கள் கட்டிய பணத்தை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.இதுகுறித்து எஸ்பி உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி சிவராமன் மற்றும் போலீசார், மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தீபாவளி சீட்டு நடத்தி ₹1 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : SP ,Dharmapuri ,Dharmapuri Fort ,Maheswaran ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது