×

நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது. அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.85 கோடி செலவில் முதல்வர் படைப்பகம், ரூ.80.90 லட்சம் செலவில் 3 பல்நோக்கு மைய கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

அத்துடன் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 77 மின்மாற்றி தடுப்புகள் அமைக்கும் பணி, ரூ.43 லட்சம் செலவில் மகளிர் உடற்பயிற்சி கூடம், ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் ஆகிய பணிகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ஜி.கே.எம். காலனியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் குளம் சீரமைக்கப்படும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்த 107 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், 350 மகளிருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களையும், கலைஞர் இலவச கண் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்ற 2493 நபர்களுக்கு மூக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும், பல்வேறு அரசு வேலையாக இருந்தாலும், கட்சி வேலைகளாக இருந்தாலும் அதற்கிடையில் கொளத்தூருக்கு வந்தால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். அதிலும் கொளத்தூருக்கு மட்டுமல்ல, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நிகழ்ச்சி என்று சொன்னால், அதைவிட அதிகமான உற்சாகம் வந்துவிடுகிறது. அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் படிக்கும் மாணவ, மாணவிகளை பார்க்கும்போது எனக்கு தானாக உத்வேகம் வந்துவிடும். அந்த உத்வேகத்தை பெறுவதற்காக நான் அடிக்கடி இங்கு வருவதுண்டு.

கடந்த 2017ம் ஆண்டு தங்கை அனிதா தற்கொலை செய்துகொண்டபோது, நாம் எல்லோரும் தாங்க முடியாத சோகத்திற்கும் பெரிய வேதனைக்கும் ஆளாகினோம். நீட் தேர்வு அவரின் கனவை சிதைத்து – அவரின் உயிரை பறித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் இன்று வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு நிச்சயம் ஒருநாள் ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது.

அது நடந்துதான் தீரும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு, நாளைக்கு இல்லாவிட்டால் நாளை மறுநாள். அது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் நிறையவே இருக்கிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் மூலமாக ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள், அவர்கள் அனைத்து நிலையில் இருந்தும் தகுதி உடையவர்களாக உயர்த்துவதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிடக்கூடாது.

ஆனால் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவையெல்லாம் பார்க்க வேண்டும். அது யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இன்றைக்கு திமுகவை பொறுத்தவரைக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த மூன்றரை ஆண்டுகளுக்குள், ஏறக்குறைய 4 ஆண்டுகள் துவங்கப் போகிறது. தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழி சொன்னோமோ, அந்த உறுதிமொழிகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

மீதம் இருக்கக்கூடிய ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட, தேர்தல் வாக்குறுதியைக்கூட, நிச்சயமாக வரக்கூடிய காலக்கட்டத்தில் உறுதியாக, விரைவாக நிறைவேற்றப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. திட்டங்களை அறிவித்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால் அந்த திட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா? யார் யாருக்கு அந்த பலன் சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்கக்கூடிய அரசாகவும் இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது. அதுதான் காரணம். ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் போதாது, அதைத் தொடர்ந்து கண்காணித்து அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். கோட்டையில் இருந்து மட்டுமல்ல, கோட்டையில் இருந்து உத்தரவிடக்கூடிய அந்த திட்டங்கள் எல்லாம் நடைபெறுகிறதா? இல்லையா? என்பதை களத்திற்கு சென்று பார்க்கக்கூடிய ஸ்டாலினாக, இன்றைக்கு முதலமைச்சராக நான் இருந்து கொண்டிருக்கிறேன். நாளைய தினம் கோவை மாவட்டத்திற்கு செல்கிறேன். அங்கு உருவாக்கப்பட்டிருக் கூடிய திட்டங்களை திறந்து வைக்க செல்கிறேன்.

சமீபத்தில் இதே சென்னை மாநகரத்தில் கூட மழையை பார்த்தோம். ஏற்கனவே, எத்தனையோ மழையை பார்த்திருக்கிறீர்கள். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவதற்கு முதலமைச்சரை தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் சென்னையே மூழ்கியது. எத்தனை பேர் பலி வாங்கப்பட்டார்கள். எத்தனையோ குடும்பங்கள் அழிந்து போனது. என்னென்ன உடைமைகள் எல்லாம் போனது. எத்தனை வீடுகள் இடிந்து விழுந்தது. அவைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். நான் அந்த பிரச்சனைக்கு அதிகம் செல்ல விரும்பவில்லை.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, அதையெல்லாம் இன்றைக்கு கண்காணிக்கக்கூடிய முதலமைச்சர் மட்டுமல்ல, துணை முதலமைச்சர் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, கவுன்சிலர்கள் மட்டுமல்ல, இந்த அரசோடு தங்களை உட்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் மட்டுமல்ல, பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் இன்றைக்கு எந்த அளவுக்கு மழை வெள்ள பணியில் பங்கெடுத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

சமீபத்தில் பெய்த மழையில்கூட காலையில் பெய்த மழை, இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த மழை, அடுத்த நாள் பார்க்கின்றபோது சாலையில் மழைநீர் தேங்கவில்லை என்ற செய்திதான் பத்திரிகைகளில் பார்த்தோம். கண்கூடாக நீங்களும் பார்த்தீர்கள். ஆனால், சில சமூக ஊடகங்களில் என்ன செய்கிறார்கள் என்றால், கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியிருந்த படத்தை போட்டு, பார்த்தீர்களா, பார்த்தீர்களா, இந்த ஆட்சியில் தண்ணீர் தேங்கியிருக்கிறது;

ஒரு மழைக்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று சில ஊடகங்களில், நான் எல்லா ஊடகங்களையும் சொல்லவில்லை, யாரும் கோபித்துக் கொள்ளவேண்டாம். ஏனென்றால் திமுக வளர்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதுதான் காரணம். ஆகவே, நீங்கள் எந்த நம்பிக்கையோடு எங்களை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்து இருக்கிறீர்களோ, அந்த நம்பிக்கையோடு உங்களுக்காக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம். அந்த நிலையில் தொடர்ந்து உங்களுக்காக பாடுபடுவோம், பணியாற்றுவோம், உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, இரா.கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் காகர்லா உஷா,

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் மோகன், நகர ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் கணேசன், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன், ஹெலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* இது ‘அச்சீவ்’ செய்யக்கூடிய அரசாங்கம்
ஒரு பக்கம் இளைஞர்களுக்குரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறோம். மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை தந்து கொண்டிருக்கிறோம். மற்றொரு பக்கம் தொழில் முன்னணி மாநிலமாக நம்முடைய திராவிட மாடல் அரசின் மூலமாக தமிழ்நாடு முதலிடத்தை பெற்றிருக்கிறது. பல்வேறு தொழில்முனைவோர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டிபோட்டு கொண்டு தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் அதற்கு தேவையான மனித ஆற்றலை கல்லூரிகளில் நாம் தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கிறோம்.

இது அனிதா அச்சீவர்ஸ் அகடாமி என்றால் இந்த அரசும், நன்றாக கவனிக்கவும், அச்சீவ் செய்யக்கூடிய அரசாங்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசு பல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. எந்தெந்த துறையில், எந்தெந்த மாநிலம் முன்னணியில் இருக்கிறது; எத்தனை சதவிகிதம் இன்றைக்கு பெற்றிருக்கிறது என்பதையெல்லாம் புள்ளிவிவரங்களுடன் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், முதன்மையான இடங்களை பெறும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* புதிதாக கட்சி தொடங்குபவர்கள் திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை யார் யாரோ வருகிறவர்கள் எல்லாம், புதிது புதிதாக கட்சியை தொடங்குபவர்கள் எல்லாம் திமுக ஒழியவேண்டும்; அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். இந்த மூன்றரை ஆண்டு காலத்தில், 4 ஆண்டுகள் தொடக்கூடிய இந்த நிலையில், இந்த ஆட்சி செய்திருக்கின்ற சாதனைகளை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அண்ணா சொல்வார் ‘வாழ்க வசவாளர்கள்’ என்று.

அதுதான் நான் சொல்ல முடியும். நாங்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவேயில்லை. எங்கள் போக்கு, மக்களுக்கு நன்மைகள் செய்யக்கூடியதுதான். தேவையில்லாமல் எல்லாருக்கும் நாங்கள் பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்கள் நேரத்தை நாங்கள் வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்கு பணியாற்றவே எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil ,Nadu ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Tamil Nadu ,Kolathur Assembly Constituency ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில்...