×

கந்த சஷ்டி திருவிழா தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு பவன் கல்யாண் பாராட்டு

சென்னை : தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடத்தப்பட்ட கந்த சஷ்டி திருவிழாவை குறிப்பிட்டு ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கோயில் நிலங்களை மீட்பது, கோயில்களுக்கு குடமுழுக்கு செய்து, அனைத்து சாதியினரையும், மகளிரையும் அர்ச்சகர் ஆக்கியது, முருகன் மாநாடு நடத்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை திமுக அரசு பதவியேற்றதில் இருந்து செய்துள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாம்பன் சுவாமி திருகோயிலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சியை ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் பாராட்டி உள்ளார். கந்த சஷ்டி பெருவிழாவின் போது கோயில் சார்பில் நடத்தப்படுகின்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் கந்த சஷ்டி பாராயணம் செய்யப்படும் என்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு 738 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்து 12 முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்கின்றனர். அதன் முதல் நிகழ்ச்சியாக திருவான்மியூர் பாம்பன் சுவாமி திருகோயிலில் 120 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் பாராயணம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சிறப்போடு நடைபெற்றது. இதனை மேற்கோள் காட்டி ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கந்த சஷ்டி கவசம் கேட்பதன் மூலம் தனக்கு வலிமை கிடைப்பதாக பவன் கல்யாண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: முருகப்பெருமானை (கார்த்திக் சுப்பிரமணியம்) போற்றும் விதமாக தமிழ்நாடு கந்த சஷ்டி கவசத்தை கொடுத்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை குழந்தைகள் அழகாக பாடும் காட்சி அழகாக உள்ளது. கடினமான காலங்களை நான் சந்திக்கும்போது சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசத்தை கேட்பதன் மூலம் மிகுந்த வலிமையைப் பெறுவேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post கந்த சஷ்டி திருவிழா தமிழக அரசின் இந்து சமய அறநிலைய துறைக்கு பவன் கல்யாண் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kanda Shashti Festival ,Pawan Kalyan ,Tamil Nadu Government Hindu Religious Charities Department ,Chennai ,Andhra Deputy Chief Minister ,Tamil Nadu Government ,Hindu Religious Charities Department ,
× RELATED ‘புஷ்பா’ பட கூட்ட நெரிசலில் பெண் இறந்த...