×

பள்ளியருகே கூல் லிப் விற்றால் சிறார் நீதி சட்டப்படி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பள்ளி அருகே கூல் லிப் விற்பனையானால், தயாரிப்பாளர், விற்பனையாளர் உள்ளிட்டோர் மீது சிறார் நீதி சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கூல் லிப் போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் சிலர் ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, ‘‘தமிழ்நாட்டில் ஏற்கனவே புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து இவை சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு இங்கு விற்கப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசு தரப்பில் பிற மாநிலங்களிலும் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முற்றிலும் புகையிலை மற்றும் போதை பொருட்களை ஒழிக்க முடியும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், புகையிலை உற்பத்தியாளர், ஏஜென்ட்கள், விற்பனையாளர் அனைவர் மீதும் சிறார் நீதிச்சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பல், வாய் பரிசோதனைகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும்.

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகள் புகையிலை தடுப்பு மையத்தை நிறுவ வேண்டும். இதுதொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்கலாம். புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணையதளம் ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர், தன்னார்வலர் கொண்ட குழு அமைத்து, புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்து கண்காணிக்க வேண்டும். புகையிலை பயன்படுத்தி புற்றுநோய் தாக்கியவர்கள் குறித்து கல்வித்துறையும், சுகாதாரத்துறையும் இணைந்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கூல் லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்களால் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மோசமான நிலையை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டு, அனைத்து மாநில அரசுகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

The post பள்ளியருகே கூல் லிப் விற்றால் சிறார் நீதி சட்டப்படி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kool Lip ,ICourt ,Madurai ,Dinakaran ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழு கடன்களை...